பயோமெட்ரிக் வருகை பதிவேடு பணி தீவிரம் அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிகாரிகளுக்கு ‘செக்’

கோவை, ஜன. 9:  கோவை மாவட்ட அரசு பள்ளிகள் மற்றும் பள்ளி கல்வித்துறை அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவேடு பணி தீவிரமாக நடக்கிறது. இதன்மூலம், இனி, யாரும் பணிக்கு தாமதமாக வர இயலாத வகையில் ‘செக்’ வைக்கப்பட்டுள்ளது.
 தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மற்றும் கல்வித்துறை அலுவலகங்களில் வருகைப்பதிவு முறையை ஒழுங்குப்படுத்தும் வகையில், ‘பயோமெட்ரிக்’ வருகை பதிவேடு முறை அமல்படுத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கடந்த ஆண்டு அறிவித்தார். இதற்கான அரசாணை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. இத்திட்டத்திற்காக, தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், ரூ.15 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2019 ஜனவரி இறுதிக்குள் இத்திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்வித்துறை அலுவலகங்கள் ஆகியவற்றில் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.  

 அதன்படி, அனைத்து அரசு பள்ளிகளுக்கும் தலா 2 பயோமெட்ரிக் கருவி விநியோகம் செய்யும் பணி தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது. இக்கருவிகளை அந்தந்த பள்ளி மற்றும் கல்வித்துறை அலுவலகங்களில் வரும் ஜன.12ம் தேதிக்குள் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தொழில்நுட்ப பணியாளர்கள் இக்கருவிகளை பொருத்தி வருகின்றனர். கோவை மாவட்டத்தில் 346 அரசு பள்ளிகள் மற்றும் மாவட்ட கல்வித்துறை அலுவலர் அலுவலகங்களில் இக்கருவி பொருத்தும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.   கோவை மாவட்டம் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள 3,688 உயர்நிலை பள்ளி, 4,040 மேல்நிலை பள்ளி என மொத்தம் 7,726 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இக்கருவி பொருத்தப்பட்டு வருகிறது. இதுதவிர, 32 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம், 120 மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம், 413 வட்டார கல்வி அலுவலர் அலுவலகம் மற்றும் வட்டார வள மையங்களிலும் தலா ஒரு கருவி வீதம் 978 பயோமெட்ரிக் கருவிகள் பொருத்தப்பட்டு வருகிறது.

 இவை, கல்வித்துறை அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு வருகிறது. ஒருபுறம் இக்கருவி பொருத்தப்பட்டு வந்தாலும், மறுபுறம் இக்கருவியை பயன்படுத்தும் முறை குறித்து வட்டார வாரியாக தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் முழு வீச்சில் அமலுக்கு வரும்போது, ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் என யாரும் இனி பணிக்கு தாமதமாக வர இயலாது.   இதுபற்றி தமிழக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘’முதல்கட்டமாக, பெரம்பலூர் அரசு பள்ளி மற்றும் சென்னை போரூர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் இத்திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டது.  

இது, வெற்றி அடைந்துள்ளது. அதனால், வரும் ஜனவரி 31க்குள் அனைத்து பள்ளிகளிலும் இத்திட்டம் அமல்படுத்தப்படும். இத்திட்டத்தின்படி, முதல்கட்டமாக, 1.63 லட்சம் ஆசிரியர்களின் ஆதார் எண், மின்னணு பயோமெட்ரிக் கருவியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இனி, பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் தாமதமாக வருவது தவிர்க்கப்படும். சொந்த வேலைகளுக்கு செல்வது, பள்ளிக்கு வராமல், வந்தமாதிரி கணக்கு காட்டுவது என எவ்வித முறைகேட்டிலும் இனி ஈடுபட முடியாது. மாணவ-மாணவிகளும் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வந்தாக வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது’’ என்றனர்.

× RELATED அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப்பதிவு