×

நெடுஞ்சாலைத்துறை சாலையில் அதிக இடங்களில் மரண பள்ளம்

மயிலாடுதுறை, ஜன.9: மயிலாடுதுறை பகுதியில் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக இடங்களில் விபத்தை ஏற்படுத்தக்கூடிய பள்ளங்கள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருப்பதால் இதனை சரிசெய்ய அதிகாரிகள் யாரும் முன்வருவதில்லை.  நாகை மாவட்டம் மயிலாடுதுறை பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில்  உள்ள சாலைகளில் அதிக இடங்களில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.  அதுவும் கஜா புயலுக்கு பிறகு அந்த பள்ளங்கள் அதிகரித்து விட்டது.  தார்சாலை போடப்படுவதும் குறிப்பிட்ட காலத்தில் அதன்மீதே பேட்ஜ் ஒர்க் பார்ப்பது வாடிக்கையாகி விட்டது. ஆனால் முழுமையான சாலை அமைக்கப்படுவதில்லை.மயிலாடுதுறை நகரில் செல்லும் நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ள சாலையில் ஏற்பட்ட பள்ளங்களை சரிசெய்வதற்கு அந்தத்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை, அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் கனரக வாகனங்களும் அதில் ஏறி இறங்கி செல்லும்போது அதில் பயணம் செய்யும் பயணிகள் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கின்றனர். இது தொடர்கதையாகி உள்ளது. வாகனத்தை ஓட்டும் டிரைவர்களுக்கு இதுகுறித்த வேதனை தெரிந்தாலும் அவரால் எதுவும் செய்ய இயலாது.   சேதமாகும் சாலையை  சாலைப்பணியாளர்கள் அவ்வப்போது சீரமைத்து வந்தனர்.

தற்பொழுது இந்த வேலையை செய்யவோ, சாலையை சரிசெய்வதற்கோ நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை.     மக்கள் பிரதிநிதிகளும் இல்லை. எம்எல்ஏ, எம்பிக்களுக்கு மனு அளித்தால் எங்களுக்கு இதுவா வேலை என அலட்சியப்படுத்தி இதுபற்றி யாரும் கண்டுகொள்வதுமில்லை.  மயிலாடுதுறையில் எந்த சாலையில் திரும்பினாலும்  பள்ளங்கள்தான் வரவேற்பளிக்க காத்திருக்கிறது. குறிப்பாக மயிலாடுதுறை சீர்காழி சாலை, மயிலாடுதுறை காந்திஜிசாலை போன்றவற்றில் பள்ளங்கள் பல மாதமாக அப்படியே கிடக்கிறது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பலமுறை முனுமுனுத்துக்கொண்டே சென்று வருகின்றனர். நிறைமாத கர்ப்பிணியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பிரசமாகிவிடும் அளவிற்கு பள்ளங்கள் உள்ளது. மேலும் அவசரகதியில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் நோயாளிகளும் செல்லும் வழியிலேயே இறக்க நேரிடுகிறது.

சாலை வரி செலுத்தவில்லை என்றால் கங்கணம் கட்டிக்கொண்டு வாகனத்தை பிடிக்கும் அரசு அதிகாரிகள், வாகனங்களை மடக்கி வட்டார போக்குவரத்து அலுவகத்திற்கு கொண்டு அவர்களை காக்க வைத்து ஆயிரக்கணக்கில் அபராதத்துடன் வரியையும் வசூல் செய்கின்றனர். ஆனால் அதே கவனத்தை  சாலையில் ஏற்படும் பள்ளத்தை சரிசெய்யும் நடவடிக்கையில் காட்டுவதில்லை. இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல எந்த அதிகாரிகளும் முன்வருவதில்லை. மயிலாடுதுறை அரசு மருத்துவமனை சாலை காவிரி பாலத்தின் வடபுறத்தில் உள்ள தனியார் மண்டபம் எதிரே உள்ள சாலையில் ஏற்பட்ட பள்ளம் கடந்த பல மாதகாலமாக அப்படியே கிடக்கிறது. தினந்தோறும் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் பள்ளத்தில் இறங்கி ஏறிச்செல்லும் போது விபத்தில் சிக்கிக்கொள்வது வாடிக்கையாக இருக்கிறது.

இதை சரிசெய்யவில்லை என்றாலும் அந்த பள்ளத்தை மண்ணை கொண்டு நிரப்பிவைக்கக்கூட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு மனமில்லை. இந்த பள்ளத்தைக்கண்ட இளநீர் வியாபரிகள் இளநீர் மட்டைகளை அந்த பள்ளத்தில் நிரப்பி வைத்து பள்ளத்தை ஓரளவு சரிசெய்துள்ளனர். அதுவும் ஓரிரு நாளில் காய்ந்துவிட்டால் அதையும் யாராவது கொண்டு சென்றுவிடுகின்றனர். இதேபோல மயிலாடுதுறை காந்திஜி சாலையில் உள்ள பெரும்பள்ளம் தினந்தோறும் விபத்தினை ஏற்படுத்தி வருகிறது. எனவே வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வரும் இந்த சாலையை நெடுஞ்சாலைத்துறையினர்  உடனே சரிசெய்யவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : places ,highway road ,
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஓரிரு...