×

மத்திய அரசை கண்டித்து மாவட்டத்தில் 4 இடங்களில் சாலை மறியல் 300 பேர் வரை கைது

தேனி, ஜன. 9: மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் நேற்று நடத்திய வேலைநிறுத்தத்தையொட்டி தேனி மாவட்டத்தில் 4 இடங்களில் நடந்த மறியலில் 300 பேர் வரை கைது செய்யப்பட்டனர். மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கக்கூடாது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்றும், இன்றும் வேலைநிறுத்தப் போராட்டம் நடக்கிறது. இதில் சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், ஏஐயுடியுசி, எஸ்டிடியு, எச்எம்எஸ், ஐஎன்டியுசி, ஏஐசிசிடியு, எம்.எல்.எப், ஏஐகேஎஸ், ஏஐஏடபிள்யுயு, டிஒய்எப்ஐ மற்றும் இதர தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன. நேற்று நடந்த வேலைநிறுத்தப் போராட்டத்தையொட்டி தேனி மாவட்டத்தில் வருவாய்த்துறையில் சுமார் 30 சதவீதம் பேர் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டனர். ஊரக வளர்ச்சித் துறையில் சுமார் 60 சதவீதம் பேர் கலந்து கொண்டனர். இது தவிர தேனி மாவட்டத்தில் மொத்தமுள்ள 130 ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலைத்தொட்டி திறப்பாளர்கள் 450 பேர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை பொறுத்தவரை பெரியகுளம், உத்தமபாளையத்தில் மொத்தமுள்ள 42 ஊழியர்களும் முழுமையாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

தேனி மாவட்டத்தில் தேனி, போடி, தேவாரம், கம்பம், குமுளி, பெரியகுளம் ஆகிய இடங்களில் அரசு போக்குவரத்துக்கழக கிளைகள் உள்ளன. இதில் நாள்தோறும் 364 பயணிகள் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் நேற்று தொழிற்சங்க போராட்டத்தில் பெரும்பாலான தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டாலும், தற்காலிக பணியாளர்கள் மற்றும் ஆளும் கட்சி தொழிற்சங்கத்தினரைக் கொண்டு 313 பஸ்களை இயக்கினர்.கம்பம்கம்பத்தில் நேற்று விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தலைமையில், மார்க்சிஸ்ட் கட்சியினர் காந்தி சிலையில் இருந்து அரசமரம், போக்குவரத்து சிக்னல், ஏ.கே.ஜி திடல் வழியாக  கம்பம்மெட்டுச் சாலை பிரிவுவரை ஊர்வலமாக சென்றனர்.ஊர்வலத்தில் விவசாய கடன்களை ரத்து செய்திடவும், புதிய விவசாய கடன் வழங்கிடவும், குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூபாய் 18 ஆயிரம் வழங்கிடவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிடவும், வேலை வாய்ப்பு கிடைக்கும் வரை மாதம் ரூபாய் 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். பெண்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் தேனி-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் தரையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்தில், விவசாய சங்க மாவட்ட தலைவர் ஜெயராஜ், விவசாய தொழிற்சங்க செயலாளர் கருப்பசாமி, சி.ஐ.டி.யூ ஏரியா தலைவர் ஜீவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏரியா செயலாளர் நாகராஜ், ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்ட தலைவர் லெனின், ஜனநாயக மாதர் சங்க செயலாளர் பிரியா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மறியலில் ஈடுபட்ட 20 பெண்கள் உட்பட 130 பேரை உத்தமபாளையம் டிஎஸ்பி சீமைச்சாமி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் உலகநாதன், சுப்புலட்சுமி மற்றும் போலீசார்கள் கைது செய்து கம்பம் கே.கே.பட்டி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். உத்தமபாளையம்நாடுதழுவிய வேலை நிறுத்தம் நேற்று பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பாக நடந்தன. இதில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், சி.ஐ.டி.யூ, உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பாக உத்தமபாளையம் பைபாஸ் சாலை சந்திப்பில் சாலைமறியல் போராட்டம் தொழிற்சங்க நிர்வாகிகள் மோகன், சுருளிவேல், வேலவன் ஆகியோர் தலைமையில் நடந்தது. இதில் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இவர்களை உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.

சின்னமனூர்
சின்னமனூர் மார்க்கையன்கோட்டை ரவண்டானா பிரிவில் மா.கம்யூ கட்சியின் சார்பில் சின்னமனூர் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமையில் சாலை மறியல் செய்தனர். அவர்களை சின்னமனூர் போலீசார் தடுத்து 35 பேர்களை கைது செய்தனர்.
போடிபோடி பஸ்நிலையம் அருகிலுள்ள தேவர் சிலை திடலில் மா.கம்யூ கட்சியின் சார்பில் மாவட்டகுழு எஸ்.கே பாண்டி தலைமையில் சாலை மறியல் செய்தனர். போடி போலீசார்கள் 63 பேரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

Tags : locations ,government ,district ,
× RELATED சென்னையிலிருந்து மும்பை செல்ல ₹1000...