×

இ ந் த நா ள் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தால் வெறிச்சோடிய அரசு அலுவலகங்கள்

ராமநாதபுரம், ஜன.9: ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் பொது வேலைநிறுத்தத்தை தொடர்ந்து அரசு அலுவலகங்கள் அனைத்தும் வெறிச்சோடின. அலுவலகங்களில் பணிகள் நடைபெறாததால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.நாடு முழுதும் தொழிற்சங்க கூட்டமைப்பினர் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக நேற்று வேலை நிறுத்தம் தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து தாசில்தார் அலுவலக ஊழியர்கள், ஊராட்சித் துறை வளர்ச்சி மேம்பாட்டு துறையினர், காப்பீடு திட்ட அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட பெரும்பாலான துறைகளின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட அளவில் காப்பீடு திட்ட அலுவலகத்தில் பரமக்குடியில் முழுமையாகவும், ராமநாதபுரத்தில் 20 பேரில் 16 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பரமக்குடி, திருவாடானை, முதுகுளத்தூர், கமுதி ஆகிய இடங்களிலும் அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் பணிகள் முடங்கின.

மாவட்ட அளவில் வருவாய்த் துறையில் அனைவரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. மின்வாரிய துறையில் மாவட்ட அளவில் 743 பேரில் 330 பேர் பணிக்கு வரவில்லை. போக்குவரத்து துறையில் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், முதுகுளத்தூர் என அனைத்து பகுதிகளிலும் சிஐடியூ உள்ளிட்ட சங்கத்தினர் 150க்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட அளவில் 60க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட வில்லை. அனைத்து அரசு அலுவலகங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மாவட்டத்தில் அரசு ஊழியர்களின் பொது வேலைநிறுத்தத்தை தொடர்ந்து அரசு அலுவலகங்களில் பணிகள் நடைபெறாததால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.சாயல்குடி: கடலாடி, முதுகுளத்தூர் பகுதியில் வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட பிற துறை அலுவலகங்களுக்கு அலுவலர்கள் பணிக்கு வராமல் விடுப்பில் சென்றனர். கடலாடி, முதுகுளத்தூர் யூனியன் அலுவலகம், தாலுகா அலுவலகம் அலுவலர்கள் இன்றி வெறிச்சோடியது, இதனால் பொதுமக்கள் அவசர சான்றுகள், அரசு சலுகைகளை பெறமுடியாமல் கடும் அவதிப்பட்டனர்.

Tags : government offices ,country ,strike ,
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!