×

நடுவழியில் நின்றதால் 1 மணி நேரம் தாமதம் பரிதாபத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள்

மேலூர், ஜன. 9:குழந்தையை சிகிச்சைக்காக எடுத்து வந்தபோது டயர் பஞ்சரானதால் ஒரு மணி நேரம் தாமதமாகியதால் உறவினர்கள் தவித்த சம்பவம் நடந்துள்ளது. பராமரிப்பற்ற 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை சீர் செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.
அவசர மற்றும் விபத்து நேரங்களில் உதவுவதற்காக 108 ஆம்புலன்ஸ் வசதி உருவாக்கப்பட்டது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது வரப்பிரசாதமாக அமைந்தது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த 08 ஆம்புலன்ஸ்களின் பராமரிப்பு என்னவோ கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த வாகனங்களின் டயர்கள் அனைத்தும் தேய்ந்து எப்போது வேண்டுமானாலும் பஞ்சர் ஆகலாம் என்னும் நிலையில் உள்ளது.

இத்துடன் இந்த வாகனங்களின் என்ஜின் உட்பட மற்ற பாகங்களின் பராமரிப்பும் சுமாராகவே உள்ளது. இருக்கும் வாகனத்தை வைத்தே ஓட்ட வேண்டும் என அதன் டிரைவர்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர்.திருச்சியிலிருந்து நேற்று சிறு குழந்தை ஒன்றை சிகிச்சைக்காக மதுரைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து வரப்பட்டது. குழந்தையின் தாயார் மற்றும் உறவினர் ஆம்புலன்சில் உடன் வந்தனர். மேலூர் நான்கு வழிச்சாலையில் வந்தபோது சிட்டம்பட்டி அருகே டயர் பஞ்சர் ஆனது. மாற்று டயரை மாற்றி ஆம்புலன்சை எடுத்துச் செல்ல 1 மணி நேரத்திற்கு மேலானது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆம்புலன்ஸ்சில் ஆட்களை ஏற்றி செல்லும்போது இப்படி நடுவழியில் ஆம்புலன்ஸ் நின்றால் என்னாவது? பரமாரிப்பற்ற அனைத்து ஆம்புலன்ஸ்களையும் சீரமைத்து, எந்த தடங்கலும் இல்லாமல் செல்வதற்கு வசதியாக மாற்ற வேண்டும் என ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மட்டுமல்ல பொது மக்களும் எதிர்பார்க்கின்றனர்.

Tags :
× RELATED கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை