×

குப்பை மேடான அயப்பாக்கம் ஊராட்சி


ஆவடி, ஜன.9: சென்னையை அடுத்த அயப்பாக்கம் ஊராட்சியில் தெரு மற்றும் குப்பைகள் சிதறி கடும் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.. சென்னை மாநகராட்சியை ஒட்டியுள்ள அயப்பாக்கம் ஊராட்சியில் சுமார் 425 ஏக்கர் பரப்பளவில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, அயப்பாக்கம் பூர்வீக கிராமம் ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடியிருப்புகள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் உள்ளன. இங்கு 75ஆயிரத்திற்கும்  மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மேற்கண்ட பகுதியில் பிரதான சாலைகள், குறுக்கு சாலைகள் என நூற்றுக்கணக்கான சாலைகள் உள்ளன. இங்கு உள்ள பல முக்கிய பிரதான சாலை சந்திப்புகள், காலி இடங்களில் குப்பைகளை பொதுமக்கள் கொட்டி வருகின்றனர்.

இதை ஊராட்சி நிர்வாகம் சார்பில் துப்புரவு ஊழியர்கள் சேகரித்து திருவேற்காடு சாலையில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டி வந்தனர். இந்நிலையில், கடந்த இரு ஆண்டுக்கு முன்பு திருவேற்காடு சாலையில் குப்பைகளை கொட்ட அப்பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசிகள் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றனர். இதனையடுத்து, அங்கு ஊராட்சி நிர்வாகத்தால் குப்பைகளை கொட்ட முடியவில்லை. இதன் பிறகு, ஊராட்சி பகுதியில் சேகரித்த குப்பைகளை  அயப்பாக்கம், செல்லியம்மன் கோவில் அருகில் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான காலி இடத்தில் கொட்டி வருகின்றனர். இந்த குப்பைகளை வாரத்திற்கு இரு முறை அங்கிருந்து லாரிகள் மூலம் கொடுங்கையூர் கிடங்கிற்கு எடுத்துச் செல்வார்கள்.

ஆனால் சில சமயங்களில் சரிவர குப்பைகளை அகற்றாததால் சாலையெங்கும் சிதறி கிடக்கின்றன. கடந்த சில தினங்களாக அதிக அளவு பனிப்பொழிவால் குப்பைகள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மக்கள் நோய் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சேரும் குப்பை மற்றும் இறைச்சிக்கழிவுகளை ஊராட்சி நிர்வாகம் முறையாக அகற்றுவதில்லை. தெரு சாலைகளில் சிதறிக் கிடக்கும் குப்பை மக்கி துர்நாற்றம் வீசுகிறது.

இதில் உற்பத்தியாகும் கொசுக்கள் கடிப்பதால் பல்வேறு விதமான நோய்களால் மக்கள் அவதிப்படுகின்றனர். தெருநாய்கள் துரத்துவதால் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்திலும் சிக்குகின்றனர்.  இது குறித்து அயப்பாக்கம் ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் கூறியும்,  அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர் என்றனர்.

துப்புரவு ஊழியர்கள் குறைவு
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், உள்ளாட்சி நிர்வாகம் செயல்பட்ட போது ஒப்பந்த ஊழியர்கள் மூலம் குப்பைகள் முறையாக அள்ளப்பட்டு வந்தன. தற்போது, ஊராட்சியில் உள்ள துப்புரவு ஊழியர்களை அதிகாரிகள் சரி வர பணி வாங்குவது இல்லை. அவர்கள் முறையாக குப்பைகளை அகற்றாததால் சாலைகளில் குப்பைகள் சிதறிக் கிடக்கின்றன. இதோடு மட்டுமல்லாமல், ஊராட்சி பரப்பளவிற்கு ஏற்ப போதுமான துப்புரவு ஊழியர்கள் கிடையாது. இதுவும் குப்பைகளை அகற்றாமல் இருப்பதற்கு ஒரு காரணமாகும். அயப்பாக்கம் ஊராட்சியை சென்னை மாநகராட்சியுடன் இணைத்தால் அடிப்படை வசதிகளை செய்ய முடியும் என்றனர்.

Tags : Panchayat ,
× RELATED பிரானூர் ஊராட்சி பகுதியில் சீராக குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை