×

மறு சுழற்சிக்கு நீர் இல்லாததால் பூண்டி ஏரியில் மீன்கள் வளர்ப்பு திட்டம் நிறுத்தம்

திருவள்ளூர், ஜன. 9:  பூண்டி ஏரியானது பருவமழை பொய்த்ததால் முற்றிலும் வறண்டு வருகிறது. மறுசுழற்சி செய்ய தண்ணீர் இல்லாததால் மீன் வளர்ப்பு திட்ட தொட்டிகள் காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் மத்திய அரசு பணம் ரூ.3.25 கோடி வீணாகியுள்ளது.  பூண்டி ஏரி. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாகும்.  இந்த ஏரியில், மீன் வளர்ப்பு திட்டத்தின்கீழ் மீன்கள் வளர்க்க முடிவு செய்யப்பட்டது. இதற்கென மத்திய அரசு ரூ.3.25 கோடி நிதி ஒதுக்கியது. இந்த நிதியில், மீன்கள் வளர்க்கும் வகையில் 68 தொட்டிகள் வாங்க முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக ரூ.1.25 கோடி மதிப்பில் 20 தொட்டிகள் வாங்கவும், ரூ.1.02 கோடி மதிப்பில் மீன்களுக்கான உணவுகள், ரூ.5 லட்சம் மதிப்பில் மீன் குஞ்சுகள் வாங்குவதென முடிவு செய்யப்பட்டது. மீதமுள்ள பணம் மீன் பராமரிப்பு செலவுகளுக்கென ஒதுக்கப்பட்டது.

இதை தொடர்ந்து கடந்த 26.11.2012 அன்று தொட்டிகளில் மீன் வளர்க்கும் திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டத்தின்படி 10 ஆயிரம் குடும்பத்தினர் பயன் பெறுவார்கள் எனவும், ஒவ்வொரு மீனும் 800 கிராம் எடை வரை வளர்த்து விற்பனைக்கு அனுப்பப்படும் எனவும் கூறப்பட்டது. மீன்கள் வளர்க்கும் தொட்டியில் உள்ள நீரை இயந்திரம் மூலம் முறைப்படி மறுசுழற்சி செய்து, மீன்கள் வளர்க்கப்பட்டு வந்தன.  கடந்த 2016ம் ஆண்டு பூண்டி ஏரி முற்றிலும் நிரம்பியதால், ஷட்டர்கள் திறக்கப்பட்டபோது, தண்ணீர் செல்லும் வேகத்தில் ஷட்டர்களில் மீன் தொட்டிகள் மோதி மீன்கள் அனைத்தும் இறந்தது. தொட்டிகளும் சேதமாகின. இதையடுத்து மீண்டும் மீன் வளர்ப்பு தொட்டிகள் ரூ.3.25 கோடியில் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்தாண்டு பருவமழை பொய்த்ததாலும், கிருஷ்ணா நீர்வரத்து நின்றதாலும் நீர் மட்டம் மளமளவென குறைந்து  பூண்டி ஏரியானது வறண்டு வருகிறது. தொட்டிகளில் மீன்களை வளர்க்க போதுமான தண்ணீர் ஏரியில் இல்லாததால், மறுசுழற்சி செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து, கடந்தாண்டு ஜூன் மாதம் அதே பகுதியில் ரூ.3 கோடி மதிப்பில் திறக்கப்பட்ட மீன்குஞ்சு உற்பத்தி நிலையத்தில் உள்ள தொட்டிகளுக்கு மீன்கள் மாற்றப்பட்டது. இதனால், ஏரியில் மீன் வளர்ப்பு திட்டம் நிறுத்தப்பட்டது. பருவமழை பெய்து ஏரியில் நீர் நிரம்பினால், இத்திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என மீன்வளத்துறையினர் தெரிவித்தனர்.

Tags : Freshwater ,Pondi Lake ,
× RELATED விழுப்புரம் அருகே 33 நன்னீர் ஆமைகள் பறிமுதல்