×

கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

விருத்தாசலம், ஜன. 9: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். விருத்தாசலம், மங்கலம்பேட்டை, உளுந்தூர்பேட்டை, கம்மாபுரம், பெண்ணாடம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து மாணவர்கள் தினந்தோறும் கல்லூரிக்கு வந்து செல்கின்றனர்.உளுந்தூர்பேட்டை பகுதியில் இருந்து மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பேருந்தில் கல்லூரிக்கு வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி திறந்து 7 மாதம் ஆகியும் இதுவரை மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்லூரி அடையாள அட்டை மற்றும் இலவச பஸ்பாஸ் ஆகியவை வழங்கவில்லை. இதனால் பேருந்துகளில் வரும் போது, மாணவர்களுக்கும் பேருந்து நடத்துனர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது. மேலும் உளுந்தூர்பேட்டை பகுதியில் இருந்து விருத்தாசலத்துக்கு காலை நேரத்தில் இரண்டு அரசு நகர பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. இது கல்லூரி மாணவர்களுக்கு போதுமானதாக இல்லை. இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் மற்றும் போக்குவரத்து துறை நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்துக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இலவச பஸ்பாஸ், கல்லூரி அடையாள அட்டை, கழிவறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து தர வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பினர்.இதுகுறித்து தகவலறிந்த இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மாணவர்கள் போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Kilinochchi Government Arts College ,
× RELATED வில்லியனூரில் முதியவரை ஏமாற்றி தாமரை...