×

காட்டுமன்னார்கோவில் அருகே புதிய டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

காட்டுமன்னார்கோவில், ஜன. 9:  காட்டுமன்னார்கோவில் அடுத்த பூர்த்தங்குடியில் ஏற்கனவே டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது அதே பகுதியில் கூடுதலாக மற்றொரு டாஸ்மாக் மதுபானக்கடை திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இருக்கும் மதுபான கடையால் அப்பகுதியில் வாகன விபத்து அதிகரிப்பு மற்றும் சாலையில் செல்லும் பள்ளி மாணவிகள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் அப்பகுதியை கடந்து செல்வதற்கே பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் கூடுதலாக திறக்கவிருக்கும் கடையினால் கிராம மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கோரி நேற்று இவ்வூராட்சிக்கு உட்பட்ட ம.உத்தமசோழகன் கிராமத்தை சேர்ந்த பெண்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்று தாசில்தார் தமிழ்ச்செல்வனிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதுகுறித்து ம.உத்தமசோழகன் கிராமமக்கள் கூறுகையில், ஏற்கனவே எங்கள் கிராமத்தில் இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பலமுறை மனு அளித்துள்ளோம். இந்நிலையில் வேண்டுமென்றே எங்கள் பகுதியில் மற்றொரு கடையை கொண்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது. குடியால் பாதிக்கப்பட்டு மீளமுடியாமல் எங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம் என தெரிவித்தனர். மேலும் தற்போது உள்ள கடையையும் இங்கிருந்து அகற்றி வேறு இடத்துக்கு கொண்டு செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையென்றால் கடந்த ஆண்டுகளில் நடைபெற்றது போல டாஸ்மாக்குக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய மக்கள் போராட்டம் நடத்துவோம் என
எச்சரிக்கை செய்தனர்.


Tags : Tasmag ,shop ,Vimanamarko ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி