×

தொட்டியம் அருகே பாலசமுத்திரத்தில் குப்பையை எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

தொட்டியம், ஜன.8: தொட்டியம் அடுத்த தோளூர்பட்டி ஊராட்சி பாலசமுத்திரம் கிராமத்தில் குப்பைகளை எரிப்பதால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதாக கூறி கலெக்டர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் கலெக்டருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.   தொட்டியம் அடுத்த பாலசமுத்திரத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கிறது. இதனை துப்புரவு பணியாளர்கள் டிராக்டரில் அள்ளிச் செல்லாமல் குப்பைகளை எரியூட்டுவதால் புகையால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து அப்பகுதியை சேர்ந்த குமார் என்பவர் கூறும்போது, குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் சேகரித்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் கொண்டு போய் கொட்ட வேண்டும் என்ற விதிமுறை இருந்தும் அதனை தோளூர்பட்டி ஊராட்சி நிர்வாகம் பின்பற்றுவதில்லை என்று பொதுமக்களிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே குவிந்துள்ள குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் சிலர் அள்ளி செல்லாமல் தீ வைத்துஎரிக்கின்றனர். இதனால் எழும் புகைமூட்டத்தால் அந்த வழியே வாகனத்தில் செல்வோருக்கு பெரிதும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் குப்பைகள் எரியூட்டப்பட்ட இடத்திலிருந்த புளியமரங்களின் வேர் பகுதி தீயினால் எரிந்து மரம் பட்டுப்போவதற்கான சூழல் உருவாகியுள்ளது. குப்பைகளை எரிப்பதனால் அதில் உள்ள பிளாஸ்டிக் பைகள் தீயில் கருகி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கிறது. எனவே குப்பைகளை அள்ளிச் சென்று சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்று கூறினார்.

Tags : Tontium ,
× RELATED தொட்டியம் அருகே நிலத்தகராறு இரு...