×

அன்னவாரி சான்றிதழ் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

திருச்சி, ஜன.8: திருச்சியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் ராஜாமணி பேசியதாவது: கடந்த ஆண்டு பயிர் காப்பீடு செய்த 20,323 விவசாயிகளுக்கு ரூ.45.88 கோடி காப்பீட்டு தொகை வழங்க ஒப்புதல் பெறப்பட்டு, 17,653 பேருக்கு ரூ.41.82 கோடி வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. மீதமுள்ள 2,670 விவசாயிகளுக்கு ரூபாய் ரூ.4.06 கோடி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.நடப்பாண்டு மத்திய கூட்டுறவு வங்கி மூலம் பயிர் கடன் வழங்க ரூ.317 கோடி இலக்கு நிர்ணயித்து நிதி ஒதுக்கப்பட்டது. இதுவரை ரூ.212 கோடி 35,363 விவசாயிகளுக்கு பயிர் கடனாக வழங்கப்பட்டுள்ளது. நடப்பு சம்பா பருவம் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நிலையில் லால்குடி, புள்ளம்பாடி, மணிகண்டம், திருவெறும்பூர், மண்ணச்சநல்லூர், தொட்டியம் ஆகிய வட்டங்களில் 55 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்  திறக்கப்பட உள்ளது. கூடுதல் கொள்முதல் நிலையங்கள் திறக்க பரிசீலிக்கப்படும். திருச்சி மாவட்டத்தில் கஜா புயலால் சேதமடைந்த வேளாண் பயிர்கள் மற்றும் தோட்டக்கலைபயிர்கள் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டதால், அதன் விளைச்சல் குறைவுற்றது. எனவே, 33 சதவீதத்திற்கு மேல் பாதிப்பு ஏற்பட்ட விவசாயிகளின் பயிர் கடன்களை நீண்ட கால மற்றும் மத்திய கால கடனாக மாற்றியமைக்க வழிவகை செய்வதற்கு ஏதுவாக தாசில்தார்கள் மூலம் அன்னவாரி சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. தகுதியான விவசாயிகள் விண்ணப்பித்து அன்னவாரி சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

Tags :
× RELATED மணப்பாறை அருகே தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளை