காடையாம்பட்டி அருகே கல்குவாரிகளை இயக்க நிரந்தர தடை கலெக்டரிடம் முறையீடு

சேலம், ஜன.8: காடையாம்பட்டி அருகே கல்குவாரிகளை இயக்க நிரந்தர தடை விதிக்கக்கோரி, கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. சேலம் கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில், பொம்மியம்பட்டி மற்றும் காடையாம்பட்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மனு ஒன்றை அளித்தனர். அதில், முள்ளாங்கரடு மற்றும் சுண்டகாப்பட்டி பகுதிகளில் இயங்கி வந்த கல்குவாரிகளால், பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தோம். குறிப்பாக, ெவடி வைத்து தகர்க்கும்போது, நிலஅதிர்வு ஏற்பட்டு வீடுகளில் விரிசல் விழுந்து சேதமடைந்தன. இதுகுறித்து கலெக்டரிடம் முறையிட்டதன் பேரில், குவாரியை இயக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

தொடர்ந்து அப்பகுதியில் ஆய்வு செய்த கனிமத் துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள், குறைதிறன் அழுத்தம் கொண்ட நாணல் ெவடிப்பு முறையை பயன்படுத்த பரிந்துரைத்துள்ளனர். இந்தமுறையை பயன்படுத்தினாலும், ஏற்கனவே இருந்த பாதிப்புகள் மீண்டும் உருவாகும். எனவே சம்பந்தப்பட்ட குவாரிகளை இயக்க நிரந்தர தடை விதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு: ஆத்தூர் வீரகனூர் அடுத்த ராயர்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் மனு ஒன்றை அளித்தனர். அதில், வீரகனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ராயர்பாளையம் கிராமத்தில், விவசாய நிலங்களுக்கு நடுவே புதிதாக டாஸ்மாக் கடை அமையவுள்ளதாக கூறப்படுகிறது. கடை அமைந்தால், பல்வேறு இன்னல்களை அப்பகுதியினர் சந்திக்க நேரிடும். எனவே, கடை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.  

Related Stories:

>