×

25 ஆண்டாகியும் பட்டா மாறுதல் கிடைக்கல கலெக்டர் முன் கோஷம் எழுப்பிய லாரி டிரைவர் குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு

நாமக்கல், ஜன.8: நீதிமன்றம் உத்தரவிட்டு 25 ஆண்டுகள் ஆகியும், வருவாய்த்துறை அதிகாரிகள் பட்டா மாறுதல் தரவில்லை என, குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் முன்பு, லாரி டிரைவர் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல்  மாவட்டம் மோகனூர் அடுத்த பனமரத்துப்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர்  கிருஷ்ணன்(49). இவர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற  குறைதீர்க்கும் கூட்டத்துக்கு, மனைவி சுமதி மற்றும் மகளுடன் வந்தார்.  பின்னர், கலெக்டர் ஆசியாமரியத்தை சந்தித்து, தனது பூர்வீக நிலத்தை 25 ஆண்டாக  பட்டா மாறுதல் செய்து தராமல், வருவாய்த்துறை அலுவலர்கள் அலைக்கழித்து  வருவதாக கூறி புகார் மனு அளித்தார்.அப்போது கிருஷ்ணன், அதிகாரிகளுக்கு  எதிராக கோஷம் எழுப்பினார். இதனால் குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.  இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவரை கூட்ட  அறையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். பின்னர், கலெக்டர் அலுவலக  போர்டிகோவுக்கு வந்த கிருஷ்ணன், அவரது மனைவி சுமதி ஆகிய இருவரும் தரையில்  அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதற்கு போலீசார் அனுமதி  அளிக்காமல், அவர்களை தரதரவென இழுத்து வெளியே கொண்டு வந்து விட்டனர்.

இதுகுறித்து கிருஷ்ணனும், அவரது மனைவியும் கண்ணீர் மல்க கூறுகையில், ‘எங்களது குடும்ப சொத்தான 8 ஏக்கர் நிலத்தை, கடந்த 1986ல் நில அளவை  மேம்பாட்டு திட்டத்தில் குட்டை என வருவாய்த்துறை அலுவலர்கள் மாறுதல்  செய்து விட்டனர். எனது தந்தை பலமுறை மனு அளித்தும், பட்டா மாறுதல்  செய்யப்படவில்லை. இதனால் நாமக்கல் உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த  வழக்கில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. நீதிமன்றத்தில் தீர்ப்பு  பெற்று 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் அதிகாரிகள் எங்களை அலைகழித்து  வருகிறார்கள். இதனால் நாங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம்,’ என்றனர்.இதுகுறித்து  வருவாய்த்துறை அலுவலர்கள் கூறுகையில், நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து  அப்பீல் செய்யப்பட்டுள்ளது. அதில் இன்னும் தீர்ப்பு வெளியாகவில்லை என்றனர்.



Tags : collector ,pick up ,
× RELATED அரசு, தனியார் தொழிற்நிலையங்களில்...