×

சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றில் தண்ணீர் திருடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சென்னிமலை, ஜன. 8:  சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றில் இருந்து திருட்டுத்தனமாக இலவச மின்சாரத்தை பயன்படுத்தி பைப் லைன் வழியாக தண்ணீர் கொண்டு செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.    சென்னிமலை அருகே ஒரத்துப்பாளையம் அணையில் திருப்பூர் சாயக்கழிவுகள் அதிக அளவில் தேங்கியதால் அணை நீர் முழுவதும் சாயக்கழிவாக மாறியதுடன் அணை நீர் சென்ற கரூர் மாவட்டம் வரை நீர் நிலைகள் அனைத்தும் மாசுபட்டது. அதன்பிறகு சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் படி அணை நீரை தேக்கி வைக்காமல் இன்று வரை தொடர்ந்து அணைக்கு வரும் நீர் முழுவதும் நொய்யல் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வறட்சி காரமணாக நொய்யல் ஆற்றங்கரையோரம் வசிக்கும் சிலர் தங்களது தென்னை மரங்களை காப்பாற்ற ஆற்று பகுதியில் என்ஜின் வைத்து பைப் லைன் மூலமாக நொய்யல் ஆற்று தண்ணீரை தங்களது நிலங்களுக்கு பாய்ச்சி வந்தனர். சாயக்கழிவு நீரை பைப் லைன் மூலமாக கொண்டு சென்று நிலங்களுக்கு பாய்ச்சுவதால் அதன் சுற்றுப்புறங்களில் பொதுமக்கள் குடிக்க பயன்படுத்தும் கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள் ஆகியவை மாசுபடும் என்பதால் பொதுமக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், விவசாயிகளுக்கு தமிழக அரசு வழங்கும் இலவச மின்சாரத்தை பயன்படுத்தி பல இடங்களில் திருட்டுத்தனமாக மின் மோட்டார் வைத்தும் நொய்யல் ஆற்று சாய தண்ணீரை நிலங்களுக்கு பாய்ச்சுவதுடன், கிணறுகளில் நிரப்புவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

  இதுகுறித்து வெங்கமேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: அரசு வழங்கும் இலவச மின்சாரத்தை பயன்படுத்தி பல இடங்களில் மின்மோட்டார் மூலம் பைப் லைன் வழியாக நிலங்களுக்கு சாயம் கலந்த ஆற்று தண்ணீரை பாய்ச்சுவதுடன் கிணறுகளிலும் நிரப்பி விடுகின்றனர். இதனால் ஒட்டு மொத்தமாக குடிநீர் மாசுபட்டு வருகிறது.இரவு, பகலாக இலவச மின்சாரத்தை பயன்படுத்தி திருட்டுதனமாக தண்ணீர் கொண்டு செல்வது குறித்து பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் பிறகு ஈரோடு மாவட்ட கலெக்டரிடம் 10-12-2018 அன்று புகார் கொடுத்த பிறகு 6 மின் இணைப்புக்களுக்கு மட்டும் அபராதம் விதித்தனர்.   இதில் மற்ற இணைப்புகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நொய்யல் ஆற்றில் இரவு நேரங்களில் இலவச மின்சாரத்தை பயன்படுத்தி தண்ணீரை வயல்களுக்கும், கிணறுகளிலும் பாய்ச்சி வருகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன், இலவச மின்சாரத்தை திருட்டுத்தனமாக பயன்படுத்துவதால் அரசுக்கும் லட்சக்கணக்கில் இழப்பு ஏற்படுகிறது.  எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : water pirates ,Niialal River ,Senimala ,
× RELATED சென்னிமலை அருகே விதிமீறி பயன்படுத்திய டிராக்டர் பறிமுதல்