×

மானியத்தில் இருசக்கர வாகனம் வாங்குவோர் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு

தஞ்சை, ஜன. 8: மானியத்தில் இலவச இருசக்கர வாகனம் வாங்குவோர் வரும் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2017-18ம் ஆண்டு முதல் அரசின் இருசக்கர வாகன திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 2018-19ம் ஆண்டுக்கான இலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் ஆண்டு வருமானம் ஈட்டும் 8ம் வகுப்பு படித்த தேர்ச்சி அல்லது தோல்வியடைந்த டிரைவர் உரிமம் உள்ள 18 முதல் 40 வயதுக்கு உட்பட்ட உழைக்கும் மகளிர், திட்ட விதிகளுக்கு உட்பட்டு ஒரு குடும்பத்தில் ஒரு நபர் பயன்பெறலாம். 125 சிசிக்கு மிகாத என்ஜின் திறன் வரை கொண்ட கியர்லெஸ், ஆட்டோ கியர் 1.1.2018க்கு பிறகு தயாரிக்கப்பட்ட புதிய இருசக்கர வாகனம் வாங்க அதிகபட்சமாக வாகனத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25 ஆயிரம் ஆகியவற்றில் எது குறைவோ அத்தொகை அரசு மானியமாக வழங்கப்படும்.மாற்றுத்திறனாளி மகளிர் 3 சக்கரம் பொருத்திய வாகனம் வாங்க மானியத்தில் 25 சதவீதம் தொகை கூடுதலாக (ரூ.31250) வழங்கப்படும். தகுதியுள்ள மகளிர் பயன்பெற விண்ணப்பங்களை அவரவர் பகுதிகளுக்கு உட்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் இன்று (8ம் தேதி) முதல் அலுவலக வேலை நாட்களில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை இலவசமாக பெற்று கொள்ளலாம். முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய இணைப்புகளுடன் அந்தந்த அலுவலகங்களிலேயே வரும் 18ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். பெறப்பட்ட விண்ணப்பங்கள் கிராம, நகர, மாநகர அளவிலான சரிபார்ப்பு குழு மூலம் சரி பார்க்கப்பட்டு மேலாய்வு செய்து மாவட்ட அளவிலான நகர்ப்புறம், ஊரக தேர்வு குழுவினரால் 2011 மக்கள்தொகை விகிதாச்சார அடிப்படையில் தேர்வு செய்யப்படும். உரிய தகுதிகள் கொண்டோர் வரும் 18ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு தஞ்சை கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Tags : buyers ,
× RELATED இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120...