×

கலாச்சார பரிமாற்றத்திற்காக சிக்கிம், அந்தமான், மேற்கு வங்க மாணவர்கள் குமரி வருகை

நாகர்கோவில், ஜன.8: குமரிக்கு கலாச்சார பரிமாற்ற நிகழ்விற்காக வரும் சிக்கிம், அந்தமான் மற்றும் மேற்கு வங்க மாணவ, மாணவியர்கள் பொங்கல் விழாவில் பங்கேற்கின்றனர். அகில  பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) மாநில துணை தலைவர் பேராசிரியை சவீதா நாகர்கோவிலில்  நிருபர்களிடம் கூறியதாவது:
இந்திய மாநிலங்களுக்கு இடையே கலாச்சார  பரிமாற்றம் செய்யும் வகையில் பாரத் கவுரவ யாத்திரா என்ற பெயரில் மாணவர்கள்  சுற்றுலா கடந்த 1962 முதல் நடந்து வருகிறது. இந்த ஆண்டும் 3 குழுக்கள்  வெவ்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன. இதில் ஒரு குழு குமரி மாவட்டம்  வருகிறது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிம், மேற்குவங்கம்,  அந்தமான் தீவுகள் ஆகிய இடங்களில் இருந்து 31 மாணவர்கள் குமரி வருகின்றனர்.  இவர்கள் வரும் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை இங்கு தங்கி இருப்பார்கள்.  முதலில் பொது இடங்களை சுற்றி பார்ப்பார்கள். பின்னர் இரு மாணவர்கள் ஒரு குடும்பத்துடன் என பிரித்து அனுப்பப்படுவர். அவர்கள் அக்குடும்பத்தின் பழக்க வழங்கங்களை அறிந்து கொள்வார்கள்.  இதுபோல் அரசு அதிகாரிகள் மற்றும் இங்குள்ள மாணவர்களுடன்  கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். மேலும் நமது முக்கிய கலாச்சார நிகழ்வான  பொங்கல் விழாவில் பங்கேற்று அதனை பற்றியும் அறிந்து கொள்வார்கள்.  அப்போது  நமது கலாச்சாரத்தை பற்றி அவர்கள் கற்றுக்கொள்வார்கள். அவர்களது  கலாச்சாரத்தை பற்றி நமது மக்களுக்கு தெரிவிப்பார்கள். குறிப்பாக வட மாநில  மக்கள் தென்னிந்தியாவுடன் கலாச்சார தொடர்பற்றவர்கள் போல் இருப்பதை தவிர்க்க  இந்த யாத்திரை உதவும். மேலும் வரும் 16ம் தேதி நாகர்கோவிலில் தென்னிந்திய  மற்றும் வட இந்திய கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் இந்த மாணவர்களுடன்  நமது மாவட்டத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்கின்றனர். இந்த மாணவர்  குழுவை வரவேற்க வெள்ளிமலை சுவாமி சைதன்யானந்தா மகராஜ் சுவாமிகள் தலைமையில்  வழிகாட்டி கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து சுவாமி  சைதன்யானந்தா தலைமையில் இதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக்கூட்டம்   நடைபெற்றது. சவீதா முன்னிலை வகித்தார். இதில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி டாக்டர் னிவாச கண்ணன், ஏ.பி.வி.பி மாநில இணைசெயலாளர் முத்துராமலிங்கம், மாவட்ட தலைவர்  ராகேஷ்,  நிர்வாகிகள் கிருஷ்ணா, பிரிதிவிராஜன், பாலமுருகன் உள்பட பலர்  கலந்து கொண்டனர்.

Tags : Sikkim ,Andaman ,West Bengal ,Kumari ,
× RELATED அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே...