×

கிண்டி-பரங்கிமலை இடையே வாலிபரை அடித்து ரயிலில் தூக்கி வீசப்பட்ட சம்பவம்: 4 பேர் கைது


சென்னை, ஜன. 8 : கிண்டி-பரங்கிமலை ரயில் நிலையங்களுக்கிடையே வாலிபரை அடித்து ரயிலில்  தூக்கி வீசப்பட்ட சம்பவத்தில் 4 பேரை கைது செய்த போலீசார் முக்கிய குற்றவாளியை   தேடிவருகின்றனர். சென்னை கிண்டி -பரங்கிமலை ரயில் நிலையங்களுக்கு  இடையே கடந்த 1ம் தேதி ஒரு வாலிபர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.  இதைப்பார்த்த ரயில்வே போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத  பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.   பின்னர் இந்த சம்பவம் குறித்து தாம்பரம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு  செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, இறந்து கிடந்த நபர் சென்னை  கிண்டி மடுவன்கரை பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (21) என்பது தெரியவந்தது.  மேலும், போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த நிலையில், வாலிபர்  பிரகாஷின் பிரேத பரிசோதனை அறிக்கையில் வாலிபர் ரயிலில் அடிபட்டு இறப்பதற்கு  முன்பே அவர் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், அவரது உடலில் பல்வேறு  இடங்களில் காயங்கள் இருப்பதாகவும் தெரிய வந்தது.

அதனை தொடர்ந்து  மருத்துவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே வழக்கை கொலை  வழக்காக மாற்றி பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணையில்,  பிரகாஷை அடித்து கொலை செய்த கிண்டி மடுவன்கரை பகுதியை சேர்ந்த  கார்த்திக், குட்டி, சீனு மற்றும் ஒரு சிறுவர் உள்பட 4 பேரை கைது  செய்தனர். மேலும், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ஆனந்தன்  என்பவனை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், கைதானவர்களிடம் நடத்திய  விசாரணையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது குடிபோதையில் உயிரிழந்த  பிரகாஷ், ஆனந்தன் என்பவனை மது பாட்டிலால் அடித்ததாகவும், அவரை பழிவாங்க  வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் தான் தனது நண்பர்களை அழைத்து வந்து  பிரகாஷை கட்டையால் தலையில் தாக்கி, அவரது வலது காலை அடித்து உடைத்து,  கத்தியால் குத்தி கொலை செய்து  பின்னர் பிரகாஷை ரயிலின் முன்பு தூக்கி  எரிந்ததாகவும் தெரிவித்தனர். இந்நிலையில் முக்கிய குற்றவாளியான ஆனந்தன்  என்பவர் கைதான பிறகே கைது செய்யப்பட்டவர்கள் சொல்வது உண்மையா என்பது  தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags : Kandi-Parangaimalai ,
× RELATED ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் போதை மாத்திரை விற்ற 3 வாலிபர்கள் கைது