×

ஒரு மாதத்திற்குள் அடிப்படை வசதிகள்

புவனகிரி ஜன. 4: மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியம் லால்புரம் ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் தெரு விளக்குகள் சரியாக எரிவதில்லை. குடிநீர் தினமும் சரியாக வருவதில்லை. சாலைகள் அனைத்தும் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. பயணிகள் நிழற்குடை பராமரிக்கவில்லை என பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி கிராம மக்கள் மேல்புவனகிரி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி களுக்கு தொடர்ந்து புகார் மனு அளித்தனர்.ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கட்சி பிரதிநிதிகளை அழைத்து மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைதி கூட்டம் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் சிவஞானம் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய அணி மாவட்ட செயலாளர் சேகர், நிர்வாகிகள் பூபாலன், காசிலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதில், கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும், முன்னுரிமை அடிப்படையில் முதல் கட்டமாக பல்வேறு பணிகளை செய்ய முடிவெடுத்து உள்ளதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஒரு மாத காலத்திற்குள் கிராமத்திலுள்ள அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படும் எனவும் அப்போது தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று நடைபெறுவதாக இருந்த கோரிக்கை ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

Tags : facilities ,
× RELATED வாக்குச்சாவடிகள் அடிப்படை வசதிகள்...