×

நகராட்சி, பேரூராட்சிகளில் பி(இ)றப்பு சான்றுக்கு கட்டண உயர்வு

ரத்து செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்
சிவகங்கை, ஜன. 3: நகராட்சி, பேரூராட்சிகளில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற பல மடங்கு கட்டணம் உயர்வு செய்துள்ளதை, உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் மூன்று நகராட்சி, 12 பேரூராட்சிகளில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குவது, கூடுதல் சான்றிதழ் பெறுவது, பதிவு செய்ய கால தாமத கட்டணங்கள் பெறப்பட்டு, கடந்த ஆண்டிற்கு முன்பு வரை சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த கட்டணங்கள் அனைத்தும் சுமார் 40 முதல் 50 மடங்கு வரை அதிகரிக்கப்பட்டன. நகராட்சிகளில் பிறப்பு, இறப்பு சான்று முதல் நகல் பெற கடந்த பல ஆண்டுகளாக ரூ.5 வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த கட்டணம் தற்போது ரூ.200ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதலாக ஒவ்வொரு சான்றிதழ் பெறவும் ரூ.200 கட்டணம் வசூல் செய்கின்றனர்.

குழந்தைகளின் பெயர் பதிவுடன் கூடிய சான்றிதழுக்கு ஏற்கனவே ரூ.5 கட்டணமாக வசூல் செய்யப்பட்டது. தற்போது புதிய கட்டணமாக ரூ.200 வசூல் செய்யப்படுகிறது. பிறப்பு, இறப்பை பதிவு செய்ய கால தாமத கட்டணம் (30 நாட்களுக்குள்) ரூ.2 ஏற்கனவே வசூல் செய்யப்பட்டது. தற்போது இந்த கட்டணம் ரூ.100 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கால தாமத கட்டணம் (ஓர் ஆண்டிற்குள்) முன்பு ரூ.5 வசூல் செய்யப்பட்டது. தற்போது ரூ.200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கால தாமத கட்டணம் (ஓர் ஆண்டிற்கு மேல்) முன்பு ரூ.10 வசூலிக்கப்பட்டது. தற்போது ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பதிவில்லா சான்று பெற (ஓர் ஆண்டிற்குள்) ரூ.2 கட்டணம் இருந்த நிலையில் தற்போது ரூ.100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல, பேரூராட்சிகளிலும் கட்டணங்கள் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, இந்த கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: நகராட்சி, பேரூராட்சிகளில் பிறப்பு, இறப்பு சான்றுகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணம், சேவை கட்டணமாக மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், பொதுமக்களிடம் இருந்து முடிந்தவரை பணம் வசூல் செய்வதாக மாற்றப்பட்டுள்ளது. முன்பு இருந்ததில் இருந்து சில மடங்கு உயர்த்தபட்டிருந்தாலும் பரவாயிலில்லை. ஆனால் 40 முதல் 50 மடங்கு உயர்த்தியுள்ளனர். கூடுதல் கட்டண உயர்வை ரத்து செய்து குறைவான புதிய கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்றனர்.




Tags : municipality ,townships ,
× RELATED கம்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்...