×

நாட்டரசன்கோட்டை பேரூராட்சியில் அறிவிக்காத மின்தடையால் மக்கள் அவதி ஒரு ஏரியாவில் பழுதானால் ஊர்முழுக்க ‘ஆப்’ செய்வதாக புகார்

சிவகங்கை, ஜன. 3:  நாட்டரசன்கோட்டை பேரூராட்சியில் தினமும் பல மணிநேர மின்தடை செய்யும் மின்வாரியத்தின் நடவடிக்கையால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். நாட்டரசன்கோட்டை பேரூராட்சியில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். காளையார்கோவில் துணை மின்நிலைய கட்டுப்பாட்டில் நாட்டரசன்கோட்டையில் பிரிவு அலுவலகம் இயங்கி வருகிறது. காளையார்கோவில் துணைமின் நிலைய கட்டுப்பாட்டில் வரும் பகுதிகளுக்கு மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் என்ற பெயரில் பகல் முழுவதும் மின்தடை செய்யப்படும். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக எவ்வித அறிவிப்பும் இல்லாமல் பகல் நேரங்களில் பல மணிநேரம் மின்தடை செய்யப்படுகிறது. ஏதேனும் ஒரு பகுதியில் பழுது பார்க்கும் பணி நடந்தாலும், நகர் முழுவதும் மின்தடை செய்து வருகின்றனர். இதுபோல் தினமும் பகல் முழுவதும் பல மணிநேரம் மின் தடை செய்யப்படுகிறது.

பேரூராட்சிக்கு என தனியாக பிரித்து மின்சாரம் வழங்கும் வசதி இல்லாமல் சுற்றுப்புறத்தில் ஏராளமான கிராமங்களை பேரூராட்சி இணைப்பிலேயே வைத்துள்ளனர். இதனால் கிராமங்களில் மின்கம்பியில் ஏதேனும் மரக்கிளை விழுந்தாலும் பேரூராட்சி முழுவதும் மின்தடை செய்யப்படுகிறது. மின்வாரிய அலுவலர்களை கேட்டால் யாரும் பொறுப்பான பதில் சொல்வதில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். அவர்கள் கூறியதாவது, ‘‘தினமும் பகல் முழுவதும் பல மணிநேரம் மின் தடை செய்வதால் எவ்வித பணிகளும் செய்ய முடியவில்லை. மின்தடை குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை. மின்வாரிய ஊழியர்கள், அலுவலர்களிடம் மின்சாரம் எப்போது வரும் எனக்கேட்டாலும் முறையான பதில் இல்லை. மின்வாரிய மாவட்ட அலுவலர்கள் மின்தடை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மின் தடை செய்வதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Tags : Natarasankottai ,
× RELATED நாட்டரசன்கோட்டையில் கல்வட்டம், முதுமக்கள்தாழி கண்டெடுப்பு