×

மூலதனம் கம்மி, லாபம் அதிகம் காளான் வளர்ப்பில் ஈடுபடுங்கள் வேளாண் நிலைய தலைவர் தகவல்

காரைக்குடி, ஜன.3: மூலதனம் குறைவு லாபம் அதிகமாக உள்ளதால் படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் காளான் வளர்ப்பு  தொழிலில் ஈடுபடலாம் என குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் தெரிவித்தார். குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் செந்தூர்குமரன் கூறுகையில், ‘‘இயற்கை நமக்கு பல்வேறு அறிமுகங்களை தந்துள்ளது. அதில் மிக முக்கியமானது காளான். எய்ட்ஸ் நோயிலிருந்து மனிதனை காக்கும் மருந்துகள் தயாரிப்பு ஆராய்ச்சியில் காளான்கள் உட்படுத்தப்பட்டுள்ளன. கொழுப்பு சத்து இல்லாத புரதச்சத்து இதில் உள்ளது. 16 முதல் 22 சதவீதம் வரை இதில் புரதம் உள்ளது. நார்சத்து 16 சதவீதம் உள்ளது. இந்த நார்சத்து இருதய சுவர்கள் வலுவடைய பெரிதும் உதவுகின்றது.

காளான் சந்தைப்படுத்துவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளதாக பரவலான பேச்சு உள்ளது. இது தவறு. காளானை மதிப்பு கூட்டி விற்பனை செய்யலாம் அல்லது தேவைக்கு ஏற்ப குடில்கள் அமைத்து உற்பத்தி செய்யலாம். காளான் பவுடர் தயார் செய்து அதனை கோதுமை மாவுடன் கலந்து அல்வா, சிப்ஸ், சப்பாத்தி, ரஸ்க் மற்றும் சூப் செய்யவும் பயன்படுத்தலாம். குன்றக்குடி வேளாண் நிலையத்தில் இது போன்ற பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. ஒரு பாக்கெட் காளான் விதையின் மூலம் 3 கிலோ வரை உற்பத்தி செய்யலாம். ரூ.40 விதைக்கு வாங்கி 3 கிலோவுக்கு மேல் உற்பத்தி செய்து ரூ.300க்கு மேல் வரை லாபம் பார்க்கலாம். இதில் மூலதனம் குறைவு, லாபம் அதிகமாக கிடைக்கும். எனவே இத்தொழிலில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அதிகஅளவில் வரவேண்டும். காலனை வெல்ல காளான் உணவு சிறந்தது’’ என்றார்.


Tags :
× RELATED காளையார்கோவில் சொர்ண காளீஸ்வரர் கோயிலில் வைகாசி தேரோட்டம் கோலாகலம்