×

கள்ளிக்குடி தாலுகா அலுவலகம் அருகே பழைய கட்டிடங்களில் சமூக விரோத செயல்கள்

திருமங்கலம், ஜன.3: கள்ளிக்குடி தாலுகா அலுவலகத்தை சுற்றியுள்ள பழைய கட்டிடங்களில் தினசரி சமூக விரோத செயல்கள் நடந்து வருவதால் ஊழியர்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.திருமங்கலம் தாலுகாவை இரண்டாக பிரித்து கள்ளிக்குடியை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அலுவலகம் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு துவக்கப்பட்டது. பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் ஒரு பகுதியில் கட்டப்பட்டுள்ள இ.சேவை மையத்தில் தான் தற்காலிகமாக தாலுகா அலுவலகம் செயல்படுகிறது. 12 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரசு இடத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பிஎஸ்என்எல் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் குடியிருப்புகள், கால்நடை மருத்துவமனை உள்ளிட்டவை இயங்கி வந்தன.இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட மற்ற அலுவலகங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டிடங்களுக்கு மாற்றப்பட்டு விட்டன. இதனால் பழைய ஊராட்சி அலுவலக கட்டிடத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களும், தற்போது காலியாக பொலிவிழந்து காட்சி தருகின்றன. இதிலிருந்த உயர்ரக கதவு, ஜன்னல் உள்ளிட்ட பொருள்களை சிலர் பெயர்த்து எடுத்து சென்று விட்டனர். இந்த இடத்தில் புதிதாக கட்டப்பட்ட இ.சேவை மையத்தில் கள்ளிக்குடி தாலுகா அலுவலகம் இயங்கி வருகிறது.

காலை முதல் மாலை வரையில் இயங்கிய தாலுகா அலுவலகத்தில் அதன்பின் ஊழியர்கள் சென்று விடுவர். மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படும். தாலுகா அலுவலகத்தை சுற்றியுள்ள பழைய கட்டிடங்களில் பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெறுகின்றன. இதனை போலீசாரும் கண்டுகொள்வதில்லை. இதனால் காலையில் அலுவலகத்திற்கு வரும் ஊழியர்களும், பொதுமக்களும் ஒருவித அச்சத்துடனேயே தாலுகா அலுவலகத்திற்கு வந்து செல்கின்றன.காலி மதுபாட்டில்கள், ஆணுறைகள் என பல்வேறு பொருள்கள் சிதறி கிடப்பதால் பொதுமக்கள் தினசரி அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து வருவாய்த் துறையினரிடம் கேட்டபோது கள்ளிக்குடி புதிய தாலுகா அலுவலகத்திற்கு இந்த இடம் முழுவதும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பணிகள் துவங்கும் போது பழைய கட்டிடங்கள் அனைத்தும் இடிக்கப்பட்டு விடும் என்றனர்.

Tags : buildings ,office ,Kallikudi Taluk ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்