×

இந்தநாள் சித்தரேவு- பெரும்பாறை சாலையில் கஜா சேதத்தை கண்டுக்காத அதிகாரிகள்

பட்டிவீரன்பட்டி, ஜன. 3: கஜா புயல் மழையால் சித்தரேவு- பெரும்பாறை மலைச்சாலையின் பல இடங்களில் மண்அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. சாலையின் பக்கவாட்டில் உள்ள தடுப்புகளும் பிடிமானமின்றி தொங்குவதால் வாகனஓட்டிகள் விபத்திற்குள்ளாகும் நிலைமை உள்ளது.சித்தரேவு- பெரும்பாறை மலைச்சாலை 15 கிமீ தூரமுள்ளதாகும். இதன் வழியேதான் அய்யம்பாளையம், சித்தரேவு, நெல்லூர், கதிர்நாயக்கன்பட்டி, தேவரப்பன்பட்டி, பட்டிவீரன்பட்டி பகுதிகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் வேலைக்கு சென்று வருகின்றனர். தவிர கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா செல்பவர்கள் வத்தலக்குண்டு, பழநி வழித்தடத்திற்கு அடுத்ததாக இச்சாலையையே பயன்படுத்துகின்றனர்.ஆபத்தான பள்ளத்தாக்குகளும், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பல ஆபத்தான வளைவுகளும் நிறைந்த மலைச்சாலையாகும்.இங்குள்ள பல ஆபத்தான வளைவுகளில் எச்சரிக்கை பலகைகள் இல்லை. வைக்கப்பட்ட இடங்களிலும் தற்போது சேதமடைந்துதான் கிடக்கிறது.

ஏற்கனவே ஆபத்துகள் நிறைந்த இச்சாலையில் தற்போது கூடுதல் ஒரு ஆபத்தும் உருவாகியுள்ளது. கடந்த நவ.16ம் தேதி கஜா புயலினால் இம்மலை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையின் பல பகுதிகளில் மண்அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. இதனால் வாகனங்கள் நிலைதடுமாறி பள்ளங்களில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகும் அபாயம் உள்ளது.ரோட்டின் பக்கவாட்டில் உள்ள இரும்பு தடுப்புகள் போதிய பிடிமானம் இன்றி தொங்கி கொண்டிருக்கிறது. இதிலுள்ள கம்பிகள் நீட்டி கொண்டிருப்பதால் டூவீலர்களில் செல்வோரின் உடைகளின் மாட்டி கொண்டால் உயிர்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.இதுபோல் தடுப்புச்சுவர்களும் பெயர்ந்து கிடக்கின்றன. அதனை மறைத்து இரும்பு தடுப்புகளை வைத்துள்ளனர். 40க்கும் மேற்kபட்ட மலைக்கிராமங்களை இணைக்கும் முக்கிய ரோடாகும் இது, மேலும் வத்தலக்குண்டுவில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலை மழைக்காலத்தில் துண்டிக்கப்பட்டால் இந்த வழித்தடத்தைதான் பயன்படுத்த வேண்டும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினரும் இதுவரை அக்கறை காட்டாமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் சித்தரேவு- பெரும்பாறை மலைச்சாலையை புதுப்பித்து, பக்கவாட்டில் தடுப்பு கம்பிகள், சுவர்களை பலப்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : dam ,road ,Ghazan ,
× RELATED கருவேல மரங்கள், ஆகாயத்தாமரை...