×

திருத்தணி அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்: சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தல்

திருத்தணி, ஜன. 3: சீரான குடிநீர் வழங்காத தாடூர் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருத்தணி ஒன்றியம், தாடூர் ஊராட்சியில் தாடூர், தாடூர் காலனி, எல்.என்.கண்டிகை, இருளர் காலனி மற்றும் இ.என்.கண்டிகை ஆகிய கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்கு 7 இடங்களில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி, பத்துக்கும் மேற்பட்ட சின்டெக்ஸ் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் நிரப்படும் தண்ணீர்  மூலம் ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகம் செய்து வந்தது. கடந்த ஆண்டு போதிய பருவமழை பொய்த்ததாலும், இப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்ததாலும் மேற்கண்ட கிராமப் பகுதிகளில் சீரான குடிநீர் வினியோகம் நடைபெறவில்லை. இதையடுத்து, இப்பகுதி மக்களுக்கு கடந்த ஒரு மாதமாக 2 டிராக்டர்கள் மூலம் ஊராட்சி நிர்வாகம் குடிநீர் சப்ளை செய்தது. இங்குள்ள எல்.என்.கண்டிகை கிராமத்தில் உள்ள 50 வீடுகளுக்கு கடந்த ஒரு வாரமாக சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீர் தேடி காலி குடங்களுடன் பல்வேறு பகுதிகளுக்கு அலைந்து வந்துள்ளனர்.

 இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், ஊராட்சி யில் சீரான குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து, நேற்று காலை 8 மணிக்கு 50 பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட மக்கள் திருத்தணி-சித்தூர் நெடுஞ்சாலையில் இ.என்.கண்டிகை அருகே காலி குடங்களுடன் சாலை மறியல் செய்து, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகலவறிந்த ஒன்றிய ஆணையர் பாபு, திருத்தணி இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு மறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமரச பேச்சுவார்–்த்தை நடத்தினர்.தாடூர் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராம பகுதிகளிலும் விரைவில் சீரான குடிநீர் வினியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி கூறினர். இதை ஏற்று மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Women ,town ,road ,Tiruttani ,
× RELATED பெண் கைதிகள் சென்ற வேனில் தீ