×

பொன்னேரி அருகே குடிமகன்களின் பாராக மாறிய அரசு பள்ளி

*சுற்றுச்சுவர் இல்லை
* இரவு காவலாளி இல்லை

பொன்னேரி, ஜன.3: பொன்னேரி அருகே மெத்தூர் அரசு பள்ளி வளாகத்தில் நுழைந்து சமு்க விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ, மாணவிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.  பொன்னேரி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட மெதூரில் அரசினர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இங்கு பல்வேறு கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் காவலாளி இல்லை. பள்ளி நுழைவாயில் பகுதியில் கேட் உள்ளது. ஆனால்  பள்ளி மேற்குப்புற பகுதியில் சுற்றுச்சுவர் இல்லை. இதனால் பள்ளி வளாகத்துக்குள் ஆடு, மாடுகள் எளிதில் நுழைந்து விடுகின்றன. பள்ளி நேரம் முடிந்ததும் வகுப்பறைகளை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்று விடுகின்றனர்.  இரவு நேரத்தில் சமூக விரோதிகள் நுழைந்து, பள்ளி வளாகத்தில் வைத்து மது அருந்துகின்றனர். பின்னர் காலி மதுபாட்டில்களை அங்கேயே போட்டு உடைக்கின்றனர். அது மட்டுமின்றி மிஞ்சிய தின்பண்டங்கள், தண்ணீர் பாக்கெட்டுகளை அங்கேயே வீசி செல்கின்றனர். அத்துடன் நில்லாமால் இயற்கை உபாதை கழித்து செல்வதால், அந்த பகுதியே துர்நாற்றம் வீசுகிறது. மறுநாள் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் காலி மதுபாட்டில்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபடுகின்றனர்.

அப்போது உடைந்த பாட்டில் கள் கால்களில் குத்தி காயமடைகின்றனர்.  போதை பொருட்களை பயன்படுத்திவிட்டு, எச்சிலை கதவு, ஜன்னல்களிலும், வராண்டாவிலும் துப்பி செல்கின்றனர். இதனால் ஏற்படும் சுகாதார சீர்கேடு மற்றும் துர்நாற்றத்தால் மாணவ, மாணவிகள் தொற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இது ஒரு புறமிருக்க ஆசிரியர், ஆசிரியைகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் ஆசிரியர்கள் சார்பில் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.
இந்நிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது. அப்போது பள்ளி வராண்டா அதை சுற்றியுள்ள மைதானத்தில் மலைபோல் குவிந்துகிடந்த காலி மதுபாட்டில்களை பார்த்து மாணவ, மாணவிகள் முகம் சுளித்தனர். இந்த பள்ளிக்கு காவலாளிகள் இல்லாத காரணத்தினால் சமூக விரோதிகள் எந்த தடையும் இன்றி உள்ளே சென்று, பள்ளி வளாகத்தை திறந்தவெளி பாராக பயன்படுத்தி வருகின்றனர்.எனவே, சம்பந்த பட்ட கல்வித்துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். இரவு காவலாளியை நியமித்து சமூக விரோதிகளும், கால்நடைகளும் பள்ளி வளாகத்துக்குள் புகுந்துவிடாமல் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். மேலும், இரவு நேரத்தில் காவல்துறையினர் பள்ளி வளாகத்தை சுற்றி ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். அப்போது, அத்துமீறி பள்ளிவளாகத்துக்குள் புகுந்து சமூகவிரோத செயல்பாடுகளில் யாராவது ஈடுபட்டிருந்தால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Government school ,citizens ,Ponneri ,
× RELATED 22 ஆண்டுகளுக்குப் பிறகு அரசுப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு