×

இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை கோரி எஸ்பி அலுவலகம் அருகே தீக்குளிக்க முயன்ற அடகு கடை உரிமையாளர்

வேலூர், ஜன. 3: நிலத்தகராறில் கொலை மிரட்டல் விடுக்கும் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ்பி அலுவலகம் அருகே அடகு கடை உரிமையாளர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.வேலூர் மாவட்டம், ஆம்பூர் பெரியாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்(41), அடகு கடை வைத்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு சுரேஷூம் அவரது நண்பர் பூபதியும் இணைந்து சீனிவாசன், விஜய்ஆனந்த் ஆகியோரிடம் இருந்து 5 ஏக்கர் நிலத்தை வாங்கி உள்ளனர்.பின்னர் தாங்கள் வாங்கிய 5 ஏக்கர் நிலத்தை பரமேஸ்வரி என்பவருக்கு சுரேஷூம், அவரது நண்பர் பூபதியும் கடந்த 2013ம் ஆண்டு ₹11.50 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளனர். இதையடுத்து தான் வாங்கிய நிலத்தை பரமேஸ்வரி, நிலத்தின் அருகில் உள்ள சீனிவாசனும், விஜய்ஆனந்திடமும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறி ஒப்படைத்துள்ளார். 3 மாதங்களுக்கு பின்னர் பரமேஸ்வரிக்கும், சீனிவாசன் தரப்புக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி, கோர்ட்டில் இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில், பரமேஸ்வரி, கடந்த சில நாட்களுக்கு முன்பு சுரேஷ், பூபதி ஆகியோரிடம் உங்களிடம்தான் நிலத்தை வாங்கினேன். அந்த இடத்தை எனக்கு மீட்டு கொடுக்க வேண்டும், இல்லையென்றால் பணத்தை கொடுக்க வேண்டும் எனக்கூறி உள்ளார். அதற்கு நிலத்தை நீங்கள்தான் மீட்க வேண்டும், பணம் தரமுடியாது என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பரமேஸ்வரி ரவுடிகளை வைத்து மிரட்டினாராம்.இதுகுறித்து கடந்த மாதம் 12ம் தேதி ஆம்பூர் டவுன் போலீசில் சுரேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் 2 பேரையும் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது நிலத்திற்கான ஆவணங்கள் அனைத்தும் பரமேஸ்வரியின் பெயரில் இருப்பதால் இருவரிடமும் எழுதி வாங்கிக்ெகாண்டு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நிலம் தொடர்பாக பரமேஸ்வரி ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் செய்தார்.

இந்நிலையில், கடந்த 29ம் தேதி ஆம்பூர் தாலுகா இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சுரேஷிற்கு போன் செய்து, காவல் நிலையத்திற்கு வருமாறு மிரட்டல் விடுத்தாராம். இதனால் அதிர்ச்சியடைந்த சுரேஷ், நேற்று காலை வேலூர் எஸ்பி அலுவலகம் வந்தார். அப்போது அவர் பெட்ரோல் கேனுடன் தீக்குளிக்க வந்தது தெரிய வந்தது.அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரிடம் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை சத்துவாச்சாரி காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது சுரேஷ், தனக்கு கொலை மிரட்டல் விடுத்த இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ், பரமேஸ்வரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தயாராக வைத்திருந்த புகார் மனுவை அளித்தார்.

Tags : owner ,pawn shop ,inspector ,SPI ,
× RELATED உணவக உரிமையாளர் மீது தாக்குதல்: பாஜக நிர்வாகி கைது