×

தேசிய குத்துச்சண்டை கோவை மாணவி சாதனை

கோவை, டிச. 28: அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டி மற்றும் ஹரியானாவில் நடந்த மல்யுத்த போட்டியில் தமிழகம் சார்பில் கோவை மாணவி பங்கேற்று சாதனைப்படைத்துள்ளார். கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் லேகா. கோவையில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக செல்வ சங்கர் என்பவரிடம் குத்துச்சண்டை மற்றும் மல்யுத்தம் பயிற்சி எடுத்து வருகிறார். இந்நிலையில், சென்னையில் நடந்த பள்ளிகளுக்கு இடையிலான மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றார். இதனை தொடர்ந்து, தேசிய அளவிலான போட்டிக்கு தகுதிப்பெற்றார்.

தேசிய அளவிலான போட்டி அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்தது. இப்போட்டியில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 240 பேர் பங்கேற்றனர். தமிழகம் சார்பில் 17 வயதிற்குட்பட்டவர்கள் பிரிவில் மொத்தம் 16 பேர் பங்கேற்றனர். இதில், லேகா 2வது சுற்று போட்டி வரை சென்று தோல்வியடைந்தார். இதனை தொடர்ந்து, ஹரியானாவில் கடந்த 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடந்த பள்ளிகளுக்கு இடையிலான தேசிய அளவிலான மல்யுத்த போட்டியில் பங்கேற்றார். இதில், தமிழகத்தின் சார்பில் 17 பேர் பங்கேற்றனர். இப்போட்டியில், லேகா காலியிறுதி வரை சென்றார்.  
 இது குறித்து மாணவி லேகா கூறுகையில் “தேசிய அளவிலான போட்டிகளில் பிற மாநிலத்தை சேர்ந்தவர்களுடன் போட்டியிடுவது சவாலான காரியமாக உள்ளது. குறிப்பாக, ஹரியானாவை சேர்ந்தவர்கள் தினமும் 8 மணி நேரம் பயிற்சியை மேற்கொள்கின்றனர். இதனால், எளிதாக சாதிக்கின்றனர். இங்கு நாங்கள் வாரப்பயிற்சி, 2 மணி நேரம் பயிற்சி என எடுப்பதால் அவர்களுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலை இருக்கிறது. தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க எனக்கு ஒத்துழைப்பு அளித்த பெற்றோர், ஆசிரியர்கள், பயிற்சியாளர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.

Tags :
× RELATED வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை