×

கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் இன்று நிறுத்தம்

சத்தியமங்கலம், டிச.28:ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.  இதில் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கும் கீழ்பவானி பிரதான வாய்க்கால் பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி கீழ்பவானி வாய்க்கால் பாசனப்பகுதியில் உள்ள ஒற்றைப்படை மதகுகளுக்கும், சென்னசமுத்திரம் கிளை வாய்க்காலின் இரட்டைப்படை மதகுகளுக்கும் என மொத்தம் 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் விநாடிக்கு 2300 கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டது. நன்செய் பாசனத்தில் நெல் பயிரிட 120 நாட்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 28ம் தேதி வரை தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடைமடைப்பகுதிகளில் நெற்பயிர் தற்போது களையெடுக்கும் பருவத்தில் உள்ளதால் மேலும் தண்ணீர் திறப்பை டிசம்பர் மாத இறுதி வரை நீட்டிக்க வேண்டும் என கீழ்பவானி பகுதி பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து டிசம்பர் 28 வரை 30 நாட்களுக்கு நீர் திறப்பு நீட்டித்து அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்படாமல் விடப்பட்டுள்ளது. இந்நிலையில்  கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் இன்று நிறுத்தப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 93.65 அடியாகவும், நீர் இருப்பு 24 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1035 கன அடியாகவும், அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1500 கனஅடி நீரும், பவானி ஆற்றில் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் 750 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. கீழ்பவானி வாய்க்கால் இரட்டைப்படை மதகுகளுக்கு புன்செய் பாசனத்திற்காக ஜனவரி முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதற்கான அரசு உத்தரவு விரைவில் வெளியாகும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : valley ,Kilavani ,
× RELATED கொலை வழக்கில் ஜாமீன் கோரி...