×

கிருஷ்ணராயபுரம் தாலுகா பஞ்சப்பட்டியில் சிதிலமடைந்த பழமையான பெருமாள் கோயில் புதுப்பிக்க வலியுறுத்தல்

குளித்தலை, டிச.28: வஞ்சிமாநகர் என எழில் கொஞ்சும் கரூர் எனும் சோழவள நாட்டில் கிருஷ்ணராயபுரம் தாலுக்காவில் அமைந்துள்ள ஏரி, குளம், நன்செய் நிலங்கள் என செழித்து விளங்கும் பஞ்சப்பட்டி என்ற ஊரின் நுழைவாயிலாக அமைந்து அருள்பாலித்து வரும் அழகுராஜ பெருமாள் கோயில் சுமார் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். ராசேந்திரசோழன் காலத்தில்  அருள்பாலித்து வந்த அழகுராஜ பெருமாள் கருணை விழிகளோடும் அடியார் துயர் துடைக்கும் வண்ணம் சங்க சக்கர தாரியாக அபயகரத்துடன் நின்ற கோலத்தில் சேவை சாதித்து வந்ததை இக்கோயிலின் மூலவர் சொல்லாமல் சொல்கிறார். இத்தனை சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் நுழைவு வாயிலில் 20அடி உயர கொடிக்கம்பம் அதன் கீழ்  அனுமன்- சிறிய திருவடி, பெரிய திருவடி என போற்றும் கருடாழ்வார் சுவாமியை பார்த்து கைகூப்பிய வண்ணம் இருவருக்கும் இடையே சங்கு சக்கரம் பொறித்த பழங்கால தட்டை வடிவ கல் பதித்துள்ளது. உட்புற நந்தவனமும் ஒரு பாழடைந்த கிணறும் பயனற்று உள்ளது.

 மேலும் நடைப்பாதை அடுத்த மேல்பகுதி ஓடு வேயப்பட்ட பகுதி  அடுத்து முன் மண்டபமும், கருவறையும் சிதிலமடைந்துள்ளது. கருங்கற் சுவர் விரிசல் அடைந்துள்ளது. ஒரே நிலை கோபுரத்தில் ஒற்றை கலசத்துடன் பொலிவு இழந்து காணப்படுகிறது.   அதே போல் ஒரே கலசத்துடன் ஒற்றை நிலை கோபுரம் தன்னுள் திசைகளில் சிறிய கோபுரத்தை உள்ளடக்கி உள்ளது. 8 திசைகளிலும் சுவாமி தாயார் இருவருடன் சுதலை சிற்பமாக அமைந்துள்ளது. கோபுரத்தில் இடையே ஆழ்வார்கள், கருடாழ்வார் உருவங்கள் அனைத்தும் உருக்குலைந்து காணப்படுகிறது. இக்கோயில் நிலை குறித்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து பழமை வாய்ந்த அழகுராஜா கோயிலை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : taluk ,Krishnarayapuram ,Perumal ,ruins ,
× RELATED பட்டியில் அடைக்கப்பட்டுள்ள ஆடுகள்...