×

சோழவந்தான் அருகே குருவித்துறையில் சாலை பணி துவக்காததை கண்டித்து சாலை மறியல்

சோழவந்தான், டிச.28: சோழவந்தான் அருகே குருவித்துறையில் தார்ச்சாலை அமைக்க கால தாமதப்படுத்தும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோரை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.முள்ளிப்பள்ளத்திலிருந்து குருவித்துறை சித்தாதிபுரம் வரை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் வரை தார் சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறையின் மூலம் டெண்டர் விடப்பட்டது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல மாதங்களாகியும் இதுவரை தார்ச்சாலை அமைக்கும் பணிகள் துவங்கவில்லை. இதை கண்டித்து கடந்த மாதம் மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம் அறிவித்தனர்.

இதையடுத்து சாலை அமைக்கும் பணி 15 நாளில் துவங்கும் என நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் உறுதியளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.ஆனால் ஒரு மாதமாகியும் தார்சாலை அமைக்கும் பணிகள் துவங்காததால் கொதிப்படைந்த கிராம மக்கள் 60க்கும் மேற்பட்டோர் நேற்று காலை சி.பி.எம் ஒன்றிய செயலாளர் வேல்பாண்டி தலைமையில் குருவித்துறையில் திடீர் பஸ் மறியலில் ஈடுப்பட்டனர். இதையடுத்து சோழவந்தான் இன்ஸ்பெக்டர் பாலாஜி, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் உதவி பொறியாளர் பாண்டியன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு வாரத்தில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘இச்சாலைப் பணிகளை முன்னால் அதிமுக எம்.எல்.ஏ., வி.ஆர்.ராஜாங்கத்தின் வி.ஆர்.கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் ஒப்பந்ததம் எடுத்துள்ளது. பல மாதங்களுக்கு முன் ஒப்பந்தம் போட்டும் இதுவரை பணிகளை துவங்கவில்லை.
இதைக் கண்டித்து கடந்த மாதம் மறியல் செய்வதாக அறிவித்ததும், உடனடியாக பணிகள் துவங்குவதாக கூறியவர்கள், பெயருக்கு ஜே.சி.பி.மூலம் சில இடங்களில் சாலையோரத்தை சுத்தம் செய்ததுடன் நிறுத்தி விட்டனர்.
இன்று பஸ் மறியல் செய்தவுடன் அதிகாரிகள் வந்து ‘தார்’ கிடைக்காததால் பணிகள் துவக்க முடியவில்லை என சமாளித்து ஒரு வாரத்தில் துவங்குவதாக கூறிச் சென்றுள்ளனர். மீண்டும் உறுதியளித்தபடி சாலைப் பணிகளை துவங்காவிட்டால், வாடிப்பட்டி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்’’ என்றனர்.


Tags : road accident ,Cholavanthan ,Kuruvithurai ,
× RELATED கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில்...