×

ஐயப்பன் கோயில் மண்டல பூஜையில் பேட்டை துள்ளல்

ராமநாதபுரம், டிச.28: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையையொட்டி நடந்த பேட்டை துள்ளலில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரத்தில் புகழ்பெற்ற வல்லபை ஐயப்பன் ஆலயம் உள்ளது. எருமேலிக்கு அடுத்தபடியாக பேட்டை துள்ளல் விழாவும், பம்பைக்கு அடுத்தபடியாக ஆராட்டு விழாவும் ஆண்டுதோறும் இங்கு நடத்தப்படும். இதனால் தென் மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து செல்வார்கள். இந்தாண்டு கார்த்திகை மாதம் முதல் நாளில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கோயிலில் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த டிச.18ம் தேதி காப்புகட்டுடன் இந்த கோயிலில் கொடியேற்றம் நடந்தது. அதைத்தொடர்ந்து நேற்று காலை மண்டல பூஜை தொடங்கியது. தலைமை குரு மோகன் தலைமை வகித்து கணபதி ஹோமத்தை நடத்தினார். நூற்றுக்கணக்கான பக்தர்கள் ரெகுநாதபுரம் முத்துநாச்சியம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, வண்ணக்கலவை பூசி சாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷத்துடன் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி துவங்கியது. அதைத் தொடர்ந்து சுவாமிக்கு 33 வகையான அபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை, பஜனை, இரவில் இருமுடிகட்டுதல் நிகழ்வும் நடந்தது.

Tags : Ayyappan Temple Regional Puja ,
× RELATED ஐயப்பன் கோயில் மண்டல பூஜையில் பேட்டை துள்ளல்