×

வந்தவாசி- ஆரணி சாலையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் முற்றுகை

வந்தவாசி, டிச.28: வந்தவாசி- ஆரணி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.வந்தவாசி டவுன், ஆரணி சாலையில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு வரும் மதுப்பிரியர்கள் அருகில் உள்ள வீடுகளின் வாசலில் அமர்ந்து மது அருந்துவதுடன், அங்குள்ள பெண்களை கேலி செய்து வருகின்றனர். இதனை தட்டிக்கேட்கும் பொதுமக்களை அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கடந்த 3 மாதத்தில் இரண்டு முறை டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தினர். இருப்பினும், கடையை இடமாற்றம் செய்யாததால், கலெக்டர் மற்றும் தாசில்தாரிடம் மனுஅளித்தனர். அப்போது, அவர்கள் டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் நேற்று மதியம் 12 மணியளவில் டாஸ்மாக் கடையை திறக்கவிடாமல் முற்றுகையிட்டனர். தகவலறிந்த தாசில்தார் அரிக்குமார், தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வரதராஜ், மகாலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள், இன்னும் 15 நாட்களில் டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். ஆனால், இதனை ஏற்க மறுத்த பெண்கள் இன்னும் 10 நாட்களில் கடையை அப்புறப்படுத்த வேண்டும் என வாக்குவாதம் செய்தனர். அவ்வாறு செய்யவில்லையென்றால், கடையின் முன் தீக்குளிப்போம் என எச்சரித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.டாஸ்மாக் கடையை பெண்கள் முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Women ,siege ,shop ,Tasmacht ,road ,Vandavasi-Arani ,
× RELATED பெண் கைதிகள் சென்ற வேனில் தீ