×

செங்கல்பட்டு - சென்னை சாலையில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி மறியல்


செங்கல்பட்டு, டிச.28: செங்கல்பட்டு - சென்னை செல்லும் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் சென்னை செல்லும் சாலையில் ஏராளமான வணிக நிறுவனங்கள், பள்ளிகள், பைக் மற்றும் கார் ஷோரூம், ஓட்டல்கள், கடை வீதிகள் உள்ளன. இதனால், இப்பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும்.  இந்நிலையில், நேற்று காலை இந்த பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் திரண்டு வந்து, இப்பகுதியில் மதுக்கடை திறக்கக்கூடாது, உடனே மூட வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் திடீரென செங்கல்பட்டு - சென்னை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து செங்கல்பட்டு டவுன் இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது, பொதுமக்கள் போலீசாரை முற்றுகையிட்டு, இந்த இடத்தில் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது. இந்த பகுதியில் திருமண மண்டபங்கள், பள்ளிக்கூடம், கடை தெரு, மார்க்கெட் அமைந்துள்ளது. இதனால், இந்த பகுதி எப்போதும் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும். டாஸ்மாக் கடை திறந்தால் பெண்கள், மாணவர்கள் பாதுகாப்புக்கு சிக்கல் ஏற்படும், விபத்து அதிகரிக்கும். எனவே இந்த கடையை உடனடியாக மூட வேண்டும் என்றனர். இதையடுத்து, அதிகாரிகளிடம் பேசி கடையை மூட ஏற்பாடு செய்கிறோம் என்று உறுதி அளித்தார். இதையேற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். பின்னர் டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Chengalpattu - Close ,Tasmag ,shop ,Chennai Road ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி