×

சென்னையின் பல்வேறு பகுதிகளில் வங்கி வாடிக்கையாளர்களை ஏமாற்றி பணம் பறித்த வடமாநில கும்பல் கைது

துரைப்பாக்கம்:  சென்னை மயிலாப்பூர், அடையாறு, திருவான்மியூர், தரமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வங்கிகளில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே வரும் வாடிக்கையாளர்களின் கவனத்தை திசை திருப்பி, மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சென்னை போலீசுக்கு தகவல் கிடைத்தது. இந்த கொள்ளை கும்பலை பிடிக்க சென்னை போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், அடையாறு பகுதியில் டாக்டர் ஒருவரிடம் இந்த கொள்ளை கும்பல் கைவரிசை காட்டியது.  இதையடுத்து, சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

அப்போது, மேற்கண்ட கொள்ளை கும்பல் கிழக்கு கடற்கரை சாலை வழியாக பைக்குகளில் மாமல்லபுரம் நோக்கி செல்வது தெரிந்தது. இதுகுறித்து சென்னை போலீசார் கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி, கிழக்கு கடற்கரை சாலையில் உத்தண்டி சுங்கச்சாவடி, கோவளம் சுங்கச்சாவடிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை சோதனை செய்தபோது, கொள்ளை கும்பல் அந்த வழியாக கேளம்பாக்கம் செல்வது கேமராவில் பதிவாகி இருந்தது. இதைத் தொடர்ந்து கொள்ளையர்கள் சென்ற வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து கேளம்பாக்கம் போலீசார் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இதனிடையே, கேளம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே கொள்ளையர்களின் பைக் நிறுத்தி வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் மாறுவேடத்தில் அங்கேயே காத்திருந்து அந்த பைக்குகளை எடுக்க வருபவரை பிடிக்க காத்திருந்தனர். அப்போது, அங்கு வந்த ஒருவர், பைக்கை எடுத்துக்கொண்டு கேளம்பாக்கம் ஜோதி நகர் பகுதியில் உப்பளம் அருகே உள்ள ஒரு வீட்டிற்கு சென்றார். இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு அந்த வீட்டை சுற்றிவளைத்து அங்கு தங்கியிருந்த 6 பேரை சுற்றி வளைத்தனர்.  அவர்களிடமிருந்து 4 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த சரண்ராஜ் (44), ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த தனுஷ் (29), நகரியை சேர்ந்த வெங்கடேஷ் (31), திருப்பதி (38), கங்கா (43), ஹைதராபாத்தை சேர்ந்த ராஜா (20) என்பதும், இவர்கள் சென்னையில் பல இடங்களில் வங்கி வாடிக்கையாளர்களின் கவனத்தை திசை திருப்பி பணத்தை கொள்ளையடித்தது தெரிந்தது. மேலும், போலீசில் சிக்காமல் இருக்க கேளம்பாக்கத்தில் ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு வீட்டில் தங்கியதும், கொள்ளையடித்த பணத்தில் சொகுசு வாழ்க்கை நடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து 6 பேரும் கைது செய்து, சென்னை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இவர்கள் எங்கெங்கு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர், என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : gang ,bank customers ,North Malta ,Chennai ,
× RELATED புதுச்சேரியில் கோயில் ஊர்வலத்தில் பெயிண்டர் கொலை வழக்கு: போலீஸ் வலை