×

தனுஷ்கோடி புயலில் கடலில் மூழ்கி உயிரிழந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி

ராமேஸ்வரம், டிச. 25: தனுஷ்கோடி புயலில் கடலில் மூழ்கி உயிரிழந்த மக்களுக்கு நேற்று தனுஷ்கோடி கடலில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அஞ்சலி செலுத்தினர்.  1964ம்  ஆண்டு டிச.23ம் தேதி நள்ளிரவில் வீசிய கடும்புயலில் தனுஷ்கோடி துறைமுகம்  நகரம் கடலில் மூழ்கியது. வீடுகளில் வசித்த மக்கள், ரயிலில் பயணம் செய்த  பக்தர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.  ஏராளமான கால்நடைகளும் கடலில் மூழ்கி பலியானது.

தனுஷ்கோடி புயலின்  நினைவாக, கடலில் மூழ்கி பலியானவர்களுக்கு ஆண்டுதோறும் டிச.24ல் தனுஷ்கோடி  கடலில் அஞ்சலி செலுத்தப்படுகிறது. நேற்று தனுஷ்கோடி புயலின் நினைவு தினம்  என்பதால் ஏராளமானவர்கள் தனுஷ்கோடி கடலில் அஞ்சலி செலுத்தினர். இதையொட்டி  நேற்று தனுஷ்கோடி தெற்கு கடற்கரை பகுதியில் செல்லத்துரை தலைமையில் புயலில்  உயிர்பலியானவர்களின் நினைவாக நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.

திமுக  நகர் செயலாளர் நாசர்கான், முன்னாள் நகராட்சி தலைவர் அர்ச்சுணன், அதிமுக  நகர் பொறுப்பாளர் கே.அர்ச்சுணன், பா.ஜ.,மாவட்ட தலைவர் முரளீதரன்,  மார்க்சிஸ்ட் கம்யூ.,தாலுகா செயலாளர் சிவா, மீனவர் கூட்டுறவு சங்க தலைவர்  குமரேசன், தனுஷ்கோடி வியாபாரிகள் சங்க தலைவர் சுப்ரமணியன் உட்பட பலர்  பேசினர். தொடர்ந்து தனுஷ்கோடி கடலில் இறந்தவர்களின் நினைவாக மலரஞ்சலி  செலுத்தி பிரார்த்தனை செய்யப்பட்டது. பொதுமக்கள், மீனவர்கள், சுற்றுலா  பயணிகள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.


Tags : Dhanushkodi ,storm ,
× RELATED கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க...