×

முத்துப்பேட்டையில் விடுமுறை தினத்தில் தனியார் பள்ளி திறப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தியதால் பரபரப்பு

முத்துப்பேட்டை, டிச.25: முத்துபேட்டையில் விடுமுறை தினத்தில் தனியார் பள்ளி திறக்கப்பட்டதால் அதிகாரிகள் ஆய்வு நடத்தி மாணவர்களை திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் தனியார் மேல்நிலைப்பள்ளி மூன்று இடங்களில் உள்ளது. இதில் 10,11,12ம் ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு பள்ளியில் வழக்கமான நேரத்திற்கு பிறகு கூடுதல் நேரங்கள் மற்றும் விடுமுறை தினங்களிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதில் மாணவர்களுக்கு கல்வி சுமை மற்றும் மன அழுத்தம் ஆகியவை ஏற்படுகிறது என்று பெற்றோர்கள் தரப்பில் கலெக்டர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து 10,11,12ஆகிய வகுப்புகளுக்கு மட்டும் தினந்தோறும் குறிப்பிட்ட நேரத்திற்கும் விடுமுறை தினங்களில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை சிறப்பு வகுப்பு நடத்த அனுமதி என்று கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைத்தனர். இதிலும் சில தனியார் பள்ளிகள், கல்வித்துறையின் சுற்றறிக்கைக்கு மாறாக கூடுதல் நேரம் வகுப்புகள் நடத்துவதாக பெற்றோர்கள் தரப்பில் தொடர்ந்து புகார் சென்ற வண்ணம் உள்ளது.

தற்பொழுது அரசு மற்றும் தனியார்கள் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன்படி முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து பள்ளிகளும் விடுமுறை விட்டுள்ள நிலையில், நேற்று முத்துப்பேட்டை மன்னார்குடி சாலையில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மட்டும் கஜா புயல் தொடர் விடுமுறையை காரணம் காட்டி  எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளும் இயங்கும் என்று அறிவித்தது. இதனால் பெற்றோர்கள் தரப்பில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ஒருசில பெற்றோர்கள் தரப்பில் பள்ளி நிர்வாகத்திடம் விடுமுறை தினத்தில் பள்ளி திறக்க கூடாது என்று புகார் மற்றும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் திட்டமிட்டப்படி பள்ளி இயங்கும் என்று பள்ளி நிர்வாகம் கூறியது. அதன்படி நேற்று காலை பள்ளி திறந்து அனைத்து வகுப்புகளுக்கும் நடத்தப்பட்டது.

இதனையறிந்த மாவட்ட கல்வி அலுவலர் விஜயா தலைமையிலான கல்வித்துறையினர், சம்பந்தப்பட்ட பள்ளியில் காலை சுமார் 10மணிக்கு அதிரடி ஆய்வு நடத்தினர். இதில் அனைத்து வகுப்புகளும் விடுமுறை தினத்தில் இயங்கியது கண்டறியப்பட்டது. இதனையடுத்து கல்வி அலுவலர் விஜயா பள்ளி நிர்வாகத்தை கண்டித்து அனைத்து மாணவர்களையும் தங்களது வீடுகளுக்கு பத்திரமாக அனுப்ப உத்தரவிட்டார். அதன்படி அனைத்து மாணவர்களும் தங்களது வீடுகளுக்கு திரும்பினர். மேலும் இதுபோன்று வகுப்புகளை இனி கல்வித்துறை உத்தரவை மீறி நடத்தகூடாது  என்று கல்வி அலுவலர் விஜயா பள்ளி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது. விடுமுறை தினத்தில் பள்ளி நடந்தபோது அதிகாரிகள் ஆய்வு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : private school opening offices ,
× RELATED மின் உதவி பொறியாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மனு