×

வேதாரண்யம் பகுதியில் 3 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் பாதிப்பு நிவாரணம் கேட்டு மத்திய அமைச்சரிடம் கோரிக்கை

வேதாரண்யம், டிச.25: வேதாரண்யம் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 15ம் தேதி வீசிய கடும் புயலினால் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் உப்பள பாத்திகள் மற்றும் தளவாட பொருட்கள் முற்றிலும் சேதமடைந்து, சிறு உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இவர்களின் பாதிப்புக்கு உரிய இழப்பீடு கோரி மத்திய அமைச்சர்களை கூட்ட நடவடிக்கை குழுவினர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். வேதாரண்யம் பகுதியில் சுமார் 800 சிறு உப்பு உற்பத்தியாளர்கள் உப்பு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் 10 ஆயிரம் குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்த நிலையில், கடந்த 15ம் தேதி வீசிய கடும் கஜா புயலினால் உப்பளங்களில் கடல்நீர் புகுந்தும், சேறு அரை அடிக்கு மேல் சேர்ந்தும் உப்பு உற்பத்தி செய்ய இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி உற்பத்தியாளர்களால் இருப்பு வைக்கப்பட்டிருந்த 1 லட்சம் டன் உப்பு நீரில் கரைந்தது. மேலும் உப்பு உற்பத்தி மற்றும் தொழிலாளர்களுக்கு தேவையான ஓய்வறை, மோட்டார் கொட்டகை, மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள், மின் இணைப்புகள், மின் சாதனங்கள் ஆகியவை பாதிக்கப்பட்டது.
இதனை மத்திய அரசின் உப்பு இலாகா அதிகாரிகள் பார்வையிட்டனர். இது குறித்து மேல் நடவடிக்கையாக மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பரிந்துரையின் பேரில் உப்பு இலாகாவை நிர்வகிக்கும் மத்திய அரசு வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ்பிரபு அவர்களை சந்தித்து இழப்பீடு குறித்து விளக்கி கூறப்பட்டது. இயற்கை பேரிடரால் பெரிதும் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் உப்பு உற்பத்தி தொழிலை மேம்படுத்த அரசு தக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். முன்னதாக இதுகுறித்து மத்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன்சிங், பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திரபிரதான், வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சர் ஹர்தீப்சிங்பூரி ஆகியோரிடம் கஜா புயல் பாதிப்பு குறித்து விளக்கப்பட்டு அதற்கு அதிக நிதி, மரக்கன்றுகள் மற்றும் வீடுகள் கட்டி கொடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

Tags : veteran area ,area ,Vedaranyam ,Minister ,
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்