×

சேறும் சகதியுமான மயான சாலை மேம்படுத்தப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கொள்ளிடம்,டிச.25: கொள்ளிடம் அருகே மாதிரவேளூர் மயானத்திற்கு செல்லும் சாலையை மேம்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரவேளூர் ஊராட்சியை சேர்ந்த கீழத்தெரு மற்றும் மேலத்தெரு ஆகிய இரண்டு தெருக்களிலிலும் சுமார் 300 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கான மயானம், கொள்ளிடம் ஆற்றின் வலது கரையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த சாலை களிமண் சாலையாக உள்ளது. சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து இந்த மயான சாலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த மயானத்திற்கு உரிய சாலை மேம்படுத்தப்படாமல் உள்ளதால் இறந்தவர்களின் உடல்களை பாடையில் வைத்து சுமந்து செல்ல சிரமப்படுகின்றனர். மழை பெய்து விட்டால் மயான சாலையில் தண்ணீர் தேங்கி விடுகிறது.

அப்போது இறந்தவர் உடலை சுமந்து செல்கின்ற போது தடுமாறி பிணத்துடன் கீழே விழுந்தும் பின்னர் எழுந்து செல்கின்ற நிலையும் இங்கு அடிக்கடி ஏற்படுகிறது. சாலை மோசமாக இருப்பதால் இறந்தவரின் உடலை எளிதில் எடுத்து செல்ல அமரர் ஊர்தியை பயன்படுத்த முடியவில்லை. இது குறித்து கிராம பொது மக்கள் சார்பில் சமூக ஆர்வலர் காமராஜ் கூறுகையில்:மாதிரவேளூர் கீழத்தெரு மற்றும் மேலத்தெருக்களுக்கான மயான சாலை ஆரம்ப காலத்திலிருந்தே மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து பலமுறை கோரிக்கை மனுக்களை நேரில் கொடுத்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை எனவே கிராம மக்களின் நலன் கருதி மயான சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags :
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...