×

நெடுங்கூரில் கம்பி தொழிற்சாலை அமைக்க மக்கள் எதிர்ப்பு குறைதீர் கூட்டத்தில் மனு

கரூர், டிச. 25: நெடுங்கூர் பகுதியில் இரும்பு கம்பி தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கரூரில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது.கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.அரவக்குறிச்சி தாலுகா நெடுங்கூர், ஆரியூர், க.பரமத்தி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது:அரவக்குறிச்சி தாலுகா நெடுங்கூர் பகுதியில் 21 ஏக்கர் பரப்பளவுள்ள நிலம், தனியார் அமைப்பு சார்பில் வாங்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் 1,000 அடி ஆழத்துக்கும் மேலாக பல ஆழ்துளை கிணறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.மேலும் இந்த பகுதியில் இரும்புக்கம்பி தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தொழிற்சாலை அமைந்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். மேலும் அதிக ஆழத்தில் நீர் உறிஞ்சப்படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும். மேலும் ஆலையின் கழிவுகளாலும் பல சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழிற்சாலையின் புகையில் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆலை செயல்படுவதற்காக அரசால் வழங்கப்படும் அனைத்து அனுமதிகளுக்கும் எங்களது ஆட்சேபனையை தெரிவித்து கொள்கிறோம். எனவே இதுகுறித்து கண்காணித்து தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : meeting ,wire plant ,Nedungur ,
× RELATED குலசேகரன்பட்டினம் ஊராட்சி கூட்டம்