×

விசேஷ நாட்களில் அர்ச்சகர்களை ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பதை தவிர்க்க வேண்டும் இந்து அறநிலையத்துறைக்கு வேண்டுகோள்

மயிலாடுதுறை,டிச.21: கிருத்திகை மற்றும் பிரதோஷ வழிபாடு அன்று அனைத்து அர்ச்சகர்களையும் கூட்டத்திற்கு அழைத்துள்ள இந்து அறநிலையத்துறை துணை ஆணையருக்கு கண்டனம் தெரிவித்து இந்து அறநிலையத்துறை செயலாளருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை முன்னாள் எம்எல்ஏவும் அனைத்து தொழிற்சங்க பொதுச்செயலாளருமான ஜெகவீரபாண்டினயன் இந்து அறநிலையத்துறை செயலாளருக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் கூறியிருப்பதாவது: கிருத்திகை மற்றும் பிரதோஷ வழிபாடு அன்று அனைத்து அர்ச்சகர்களையும் கூட்டத்திற்கு அழைத்துள்ளதை தவிர்க்க வேண்டும்.  தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள ஆலயங்களில் தற்போது நாளுக்குநாள்  பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது.

குறிப்பாக நவக்கிரக வழிபாடுகள் மயிலாடுதுறை, கும்பகோணம் போன்ற ஊர்களில் உள்ள ஆலயங்களில் ஓர் ஆன்மீக புரட்சி ஏற்பட்டது போல காணப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களின் நற்முயற்சியினால் தான் இவைகள் சாத்தியமாகிறது. இந்நிலையில் தற்போது இந்து சமய அறநிலையத்துறை  கும்பகோணம் உதவி ஆணையர் அவர்கள், அவரது கட்டுப்பாட்டில் இயங்கும் கோயில்களின் அர்ச்சகர்கள், குருக்கள்களுக்கு அலைபேசி வழியே 20-12-2018 அன்று கும்பகோணத்தில் உள்ள அலுவலகத்திற்கு காலை வரவேண்டும் என்றும், அன்று நாள் முழுவதும்  ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்கள். மிக முக்கியமான கிருத்திகை என்னும் முருகப்பெருமானுக்கு உகந்த சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் நாளாகவும், அதேதினம் மாலை சிவபெருமானுக்கு உகந்த பிரதோஷ வழிபாடுகள் நடைபெறும் நாளாகவும் உள்ளது.

இரு பெரும் ஆன்மீக வழிபாடுகளுக்கும் நூற்றுக்கணக்கானோர் வந்து, வழிபாடு தொடர்ந்து செய்வதால் பக்தர்களை திருப்தி செய்திட அந்தந்த கோயிகளில் குருக்கள்கள், அர்ச்சகர்கள் இருக்கவேண்டியது அவசியமாகிறது. பக்தர்களின் நிலை உணர்ந்து இந்து சமய அறநிலையத்துறை  கும்பகோணம் உதவி ஆணையர் இந்த நாளில் ஆலோசனை கூட்டத்தை அழைத்திருக்க கூடாது. ஆகவே வேறொரு நாளில் ஆலோசனை கூட்டத்தை நடத்திடவும், எதிர்காலத்தில் இது போன்ற நாட்களை தவிர்த்த அஷ்டமி நவமி போன்ற நாட்களில் ஆலோசனை கூட்டங்களை நடத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : priests ,consultation ,Chamber of Deputies ,
× RELATED தட்டு காணிக்கை கையாடல் விவகாரம்;...