நிரந்தர பாலம் 8 மாதமாக கட்டப்படாததை கண்டித்து மேலப்பாளையத்தில் அனைத்து கட்சியினர் மறியல்

நெல்லை, டிச. 21: நிரந்தர பாலத்திற்கான கட்டுமானப் பணி 8 மாதமாக துவங்கப்படாததால் ஆவேசமடைந்த அனைத்துக்கட்சியினரும், பொதுமக்களும் மேலப்பாளையத்தில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்தினர். நெல்லை மேலப்பாளையத்தில் இருந்து டவுன் செல்லும் சாலையில் உள்ள வாய்க்கால் பாலம் பழுதடைந்தது.  அந்த பாலத்தை பொதுப்பணித்துறையினர் அகற்றி விட்டு தற்காலிக பாலம் அமைத்தனர். ஆனால் வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக வரும் போது தற்காலிக பாலத்தில் போக்குவரத்து தடைபட்டது. மேலும் கனரக வாகனங்கள் செல்ல முடியவில்லை. ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமே செல்கின்றன. அந்த வழியாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் மேலப்பாளையத்தில் இருந்து டவுன் செல்ல பொதுமக்கள் கடந்த 8 மாதமாக சிரமப்பட்டு வருகின்றனர்.

இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் புதிய பாலம் பணியை தொடங்க வலியுறுத்தி மேலப்பாளையத்தில் நேற்று அனைத்து கட்சி சார்பில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

அதன்படி அனைத்து கட்சியினர் விஎஸ்டி பள்ளிவாசல் முன்பு திரண்டனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் முன்னாள் கவுன்சிலர் முகைதீன் அப்துல்காதர், ஹாபிஸ், திமுக முன்னாள் கவுன்சிலர் சைபுன்னிசா பேகம் மற்றும் அசன், அலிசேக்மன்சூர், சிறுபான்மை பிரிவு உஸ்மான், ஞானியார், மாணவரணி அமைப்பாளர் ரம்சான் அலி, காங்கிரஸ் கட்சி சார்பில் பகுதி தலைவர் ஆசாத் பாதுஷா, எஸ்டிபிஐ மின்னத்துல்லா, தாடிபாய், புகாரிசேட், மனிதநேய மக்கள் கட்சி பகுதி தலைவர் காஜா, மமக பகுதி தலைவர் காஜா, குதாமுகமது, தமஜக மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார், செய்தி தொடர்பாளர் ஜமால், ஜாபர், மைதீன் மற்றும் பொதுமக்கள் என திரளானோர் பங்கேற்றனர்.

 இதையடுத்து உதவி கமிஷனர் சக்கரவர்த்தி, இன்ஸ்பெக்டர் தில்லைநாகராஜன் தலைமையில் குவிக்கப்பட்ட போலீசார் சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து மேலப்பாளையம் காவல் நிலையத்தில் நடந்த சமாதானப்  பேச்சுவார்த்தையில் நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளர் கிருஷ்ணசாமி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஆதிமூலம் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில், தற்போது 5 மீட்டர் அகலகத்தில் உள்ள தற்காலிக பாலம் 7.5 மீட்டராக அகலப்படுத்தப்படும். வரும் மார்ச் 30ம் தேதிக்குள் நிரந்தர பாலத்திற்கான  கட்டுமான பணி துவங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.  இதை ஏற்றுக்கொண்ட அனைத்துக்கட்சியினர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

Related Stories: