×

விஏஓ.க்கள் வேலைநிறுத்தம் 13 ஆயிரம் விண்ணப்பம் தேக்கம் அரசு கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு

திண்டுக்கல், டிச.21: விஏஓ.க்களின் வேலைநிறுத்தத்தினால் மாவட்டத்தில் 13 ஆயிரம் விண்ணப்பங்கள் தேங்கியுள்ளன. கிராம நிர்வாக அலுவலர்களை தொழில்நுட்பப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். ஊதிய நிலுவைத் தொகையை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 21 அம்ச கோரக்கையை வலியுறுத்தி விஏஓ.க்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 11வது நாளான நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல், திருச்சி, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஏஓ.க்கள் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்டத் தலைவர் ராஜரத்தினம் தலைமை வகித்தார். பொருளாளர் முருகன், திருச்சி மாவட்டத் தலைவர் அந்தோணிதுரை, செயலாளர் பொன்.கணபதி உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.

நிர்வாகிகள் கூறுகையில், ‘‘50 சதவீத சான்றிதழ் வழங்கும் பணி ஆன்லைன் மயமாகிவிட்டது. ஆனால் தொழில்நுட்ப பணியாக வரையறை செய்யாமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது. பதவி உயர்வில் 30 சதவீதமே எடுத்துக் கொள்வதால் 15 ஆண்டுகள் நாங்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அரசியல் அழுத்தம், அதிகாரிகளின் நெருக்கடிக்கு மத்தியில் பணி செய்து வருகிறோம். எங்களின் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தினால் அரசு கண்டுகொள்வதில்லை. தற்போது காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் இருந்தாலும் எங்களை அழைத்துப் பேச மறுக்கிறது. ஊதியத்தை நிறுத்துவது, இதர பணியாளர்களை எங்களுக்கு எதிராக தூண்டிவிடுவது என்ற போக்கிலே சென்று கொண்டிருக்கிறது. எங்களின் வேலைநிறுத்தத்தினால் மாவட்டத்தில் 13 ஆயிரம் விண்ணப்பங்கள் தேங்கி உள்ளன. பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் சான்று கிடைக்க வேண்டும் என்று எந்த அக்கறையும் அரசிற்கு இல்லை. எனவே 24ல் சட்டமன்ற உறுப்பினர்களையும், 26ல் எம்பி.க்களை சந்தித்தும் மனுக் கொடுக்க உள்ளோம். 27ல் மாநகராட்சி முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் என்று போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம்’’ என்றனர்.

Tags : VOs ,government ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...