×

பொள்ளாச்சி, துடியலூர் சந்தையில் கால்நடைத்துறையினர் ஆய்வு

கோவை, டிச. 21: கோமாரி நோய் தொடர்பாக பொள்ளாச்சி, துடியலூர் பகுதியில் உள்ள கால்நடை சந்தைகளில் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர்.  கோமாரி நோய் பாதிப்பின் காரணமாக பொள்ளாச்சி, துடியலூரில் மாட்டு சந்தை நடத்த கூடாது என கலெக்டர் உத்தரவிட்டார். ஆனால், உத்தரவை மீறி பொள்ளாச்சியில் கடந்த 18ம் தேதி மாட்டு சந்தை நடந்தது. இரண்டு வாரங்கள் சந்தை மூடப்பட்ட நிலையில், வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. இது குறித்து தகவலறிந்த மாவட்ட நிர்வாக அதிகாரிகள், கால்நடைத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதனை தொடர்ந்து அடுத்த இரண்டு வாரங்களுக்கு கால்நடைகளை சந்தையில் விற்க, வாங்க கூடாது என அறிவுறுத்தினர். கால்நடை சந்தைகளில் இருந்து தொற்று நோய் உள்ள மாடுகளை வாங்கினால், நல்ல நிலையில் உள்ள மாடுகளும் பாதிக்கும் என்றனர். இந்நிலையில், நேற்று கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் பொள்ளாச்சி சந்தைக்கு சென்று ஆய்வு நடத்தினர். மாடுகளுக்கு கோமாரி நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என பரிசோதனை செய்தனர். இதனை தொடர்ந்து, பொள்ளாச்சி மாட்டு சந்தையில், மாவட்ட கலெக்டரின் உத்தரவின்படி வரும் 31ம் தேதி வரை மாட்டுச்சந்தை இயங்காது என்ற அறிவிப்பு பலகையை வைத்துள்ளனர். இதே போல், துடியலூர் சந்தையில் வைக்கவுள்ளனர்.

 இது குறித்து கால்நடை துறை அதிகாரிகள் கூறியதாவது: பொள்ளாச்சி, துடியலூர் சந்தையில் வரும் 31ம் தேதி வரை கால்நடைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தகவல் அளிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக பொள்ளாச்சி சந்தை நடந்தது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு நோய் தொற்று இருக்கிறதா என பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்தை நடக்கும் பகுதியில் அறிவிப்பு பலகை வைக்க மாவட்ட நிர்வாகத்திடம் அறிவுறுத்தினோம். அதன்படி, அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கோமாரி நோய் தாக்கம் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags : Pollachi ,
× RELATED நீட் தேர்வில் முறைகேடு சட்டபூர்வமான...