×

பழநி கோயிலில் பக்தர்களுக்கு ‘அல்வா’ தரும் போலி கைடுகள்

பழநி, டிச.21: பழநியில் கோயில் ஊழியர் எனக்கூறி பணம் பறித்த போலி வழிகாட்டி மீது கர்நாடகா பக்தர்கள் போலீசில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இவ்வாறு வரும் பக்தர்களிடம் விரைவில் சாமியை தரிசிக்க ஏற்பாடு செய்வதாக கூறி பணம் பறிக்கும் கும்பல் பழநி நகரில் அதிகளவு சுற்றித் திரிந்து வருகின்றனர்.

நேற்று காலை பெங்களூருவில் இருந்து வந்த ஐயப்ப பக்தர்கள் 7 பேர் கொண்ட குழுவை கோயில் ஊழியர் என்றும், விரைவு தரிசனம் செய்து தருவதாகவும் கூறி பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய சம்பவம் நடந்துள்ளது. பணம் கொடுத்து ஏமாந்த ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றிய நபரின் புகைப்படத்துடன் அடிவாரம் போலீசில் புகார் செய்தனர். விசாரணையில் அந்த நபர் அடிவாரத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் குறித்து பெங்களூருவை சேர்ந்த ஐயப்ப பக்தர் உமேஷ் (30) கூறுகையில்,‘‘நான் பெங்களூருவில் டிராவல்ஸ் தொழில் செய்து வருகின்றேன். எனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் 7 பேருடன் நேற்று முன்தினம் இரவு பழநி வந்தேன். நேற்று காலை மலைக்கோயிலுக்கு செல்வதற்காக ரோப்கார் நிலையம் வந்தோம். அப்போது வெள்ளை வேட்டி அணிந்து வந்த ஒரு நபர் கோயில் ஊழியர் என்று கூறினார். விரைவில் சாமி தரிசனம் செய்து தருவதாகக் கூறினார். ரூ.9 ஆயிரம் பணம் செலவாகும் என்றார். முன்தொகையாக ரூ.3 ஆயிரம் பணம் வாங்கிக் கொண்டார். ரோப்கார் மூலம் மலைக்கோயிலுக்கு அழைத்து சென்றார். அங்கு உட்கார வைத்துவிட்டு விரைவில் வந்துவிடுவதாகக் கூறிச் சென்றார்.சுமார் 2.30 மணி நேரம் காத்திருந்தும் வரவில்லை. எனது நண்பரை செல்போனில் படம் எடுக்கும்போது அருகில் இருந்த அந்நபரின் முகம் பதிவாகி இருந்தது. அந்த போட்டோவை கோயிலில் இருந்த அதிகாரிகளிடம் காட்டியபோது அவர் கோயில் ஊழியர் இல்லை என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அடிவாரம் போலீசில் புகார் செய்துள்ளோம்’’ என்றார். இச்சம்பவம் பழநி நகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





Tags : Alva ,devotees ,Palani Temple ,
× RELATED வல்லவன் வகுத்ததடா விமர்சனம்