×

பாறைக்குழியை மூட கோரி மறியல்

திருப்பூர், டிச.21: திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் உள்ள பாறைக்குழியை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாநகராட்சி 50வது வார்டுக்கு உட்பட்ட கே.எம்.நகர் முத்தையன் லே-அவுட் பகுதியில் நான்கு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்.  குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும்.

வெள்ளியங்காடு பகுதியில் சாக்கடை கால்வாய்களை தூர்வாருவதுடன், சாக்கடை கழிவுகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். தெரு விளக்கு எரியாமல் இருப்பதை சரிசெய்ய வேண்டும். குப்பை நிரம்பிய பாறைக்குழியை மண்ணைப் போட்டு மூட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியங்காடு நால் ரோட்டில், மா.கம்யூ., தெற்கு மாநகரக்குழு உறுப்பினர் பொம்முதுரை தலைமையில் அப்பகுதி மக்கள் 200க்கும் மேற்பட்டோர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி உதவி ஆணையர் கண்ணன் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுநடத்தினர். அப்போது, கே.எம்.நகர் பாறைக்குழியை மண் போட்டு மூட ஏற்கெனவே ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. இருப்பினும், அதற்கு முன்பே  பாறைக்குழியை மூட மாநகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  சாலை சீரமைப்பு, தெரு விளக்கு பிரச்னை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் இன்னும் ஒரு வாரத்திற்குள் நிறைவேற்றப்படும் என அவர் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.


Tags :
× RELATED பிளஸ் 2 தேர்வில் மூலனூர் பாரதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை