×

உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு விவசாயிகள் 4ம் நாளாக போராட்டம்

பொங்கலூர், டிச.21: உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 4ம் நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாய விளைநிலங்கள் உயர்மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். மாறாக சாலையோரமாக இத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இதை வலியுறுத்தி தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்திற்கு பல்வேறு கட்சியினரும், விவசாய சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையத்தில் ஒருங்கிணைப்பாளர் கொங்கு.ராஜாமணி தலைமையில் போராட்டம் நடந்து வருகிறது. அதேபோல், சுல்தான்பேட்டையில் ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ் தலைமையில் ஏராளமான விவசாயிகள் நேற்று 4ம் நான்காம் நாளாக போராட்டம் நடத்தினர்.

இதில், மின் கோபுரங்களால் விவசாயி இறந்தது போல் உருவபொம்மை தயார் செய்து பாடை கட்டி, ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் நடத்தி வரும் இப்போராட்டத்திற்கு  திமுக.,வினர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். கல்லூரி மாணவர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோஷமிட்டனர்.   இதைத்தொடர்ந்து தேமுதிக மாநில துணை தலைவர் எல்.கே.சுதீஷ் தனது கட்சி தொண்டர்களுடன் போராட்டம் நடக்கும் இடத்திற்கு வந்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.
இதுகுறித்து போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ராஜாமணி கூறுகையில்,`மின்துறை அமைச்சர் தங்கமணி விவசாய சங்க நிர்வாகிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறுவது உண்மையில்லை. மாணவர்களின் ஆதரவு எங்களுக்கு பெருகி வரும் நிலையில் வரும் ஞாயிறு முதல் கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்’ என்றார்.

Tags : Opposition growers ,
× RELATED ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி ஆண்டுவிழா