×

கோயில் அருகே இருந்த பிராந்தி கடையை அகற்றகோரி எச்.ராஜா திடீர் போராட்டம்

தொண்டாமுத்தூர், டிச.21: கோயில் அருகே டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என கூறி பா.ஜ., தேசிய செயலாளர் எச்.ராஜா திடீரென போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.  கோவை சிறுவாணி ரோடு தண்ணீர்பந்தல் நால்ரோடு சந்திப்பில் நுாற்றாண்டு பழமை வாய்ந்த அன்னியூர் அம்மன்கோவில் உள்ளது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில்  உள்ள இந்த கோயில் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக எந்த பராமரிப்பும் இல்லாமல் சிதிலமடைந்துள்ளது. இந்த கோவிலை  பா.ஜ., தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று பார்வையிட வந்தார். அப்போது ஊர் மக்கள் சார்பில் எச்.ராஜாவிடம் மனு அளிக்கப்பட்டது. அதில், ‘‘கோவை சிறுவாணி சாலையில் உள்ள அன்னியூர் அம்மன் ேகாயிலை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.. இந்த கோவிலுக்கு சொந்தமாக ரூ.75 கோடிக்கு மேல் சொத்து உள்ளது. அதனை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்த எச்.ராஜா  “ தமிழகம் முழுவதிலும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில் எந்த பராமரிப்பும் இன்றி சிதலமடைந்துள்ளன. இந்த கோயில்களை புனரமைக்க வேண்டிய அறநிலைய துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிலைக்கடத்தல் தடுப்பு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் மீது சிலைக்கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்கள்  தங்களை காப்பாற்றிக் கொள்ளவே புகார்தெரிவித்து வருகின்றனர். கஜா புயலில் பாதிக்கப்பட்ட 3 லட்சம் வீடு புதுப்பிக்க தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இவ்வாறு எச்.ராஜா கூறினார். இந்நிலையில், இப்பகுதியில் உள்ள கோவில் அருகில் டாஸ்மாக் கடை இருப்பதை கண்ட எச்.ராஜா, கோயில்  அருகே டாஸ்மாக் கடை இருக்க கூடாது என சட்டம் உள்ளது, அதை மீறி இங்கு ஏன் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது என கூறி அந்த டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி அப்பகுதியில் திடீரென போராட்டம் நடத்தினார். இதனை தொடர்ந்து  பேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்  மனோகரன்  அவரிடம் பேச்சுநடத்தியதால் எச்.ராஜா அங்கிருந்து கிளம்பி சென்றார்.



Tags : struggle ,shop ,temple ,Brandy ,
× RELATED புழல் அருகே பேப்பர் கடை ஊழியரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது