×

விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தூக்குக் கயிற்றில் தொங்கி விவசாயிகள் போராட்டம் திருவண்ணாமலை அருகே பரபரப்பு

திருவண்ணாமலை, டிச.21: திருவண்ணாமலை மாவட்டத்தில் விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தூக்குக் கயிற்றில் தொங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம், பவர்கிரிட் நிறுவனம் இணைந்து, தமிழகத்தில் திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் வழியாக வெளி மாநிலங்களுக்கு புதிய மின் வழித்தடங்களை ஏற்படுத்தி வருகின்றன.அதற்காக, விவசாயிகளுக்கு சொந்தமான விளை நிலங்களில், முன்னறிவிப்பு இல்லாமல் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படுகிறது. அதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே, இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவண்ணாமலை அடுத்த தென்னசரம்பட்டு கிராமத்தில் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் பலராமன் தலைமையில் தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று 4வது நாளாக நீடித்தது. கடும் குளிரையும், பனியையும் பொருட்படுத்தாமல், விவசாயிகள் இரவு, பகலாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் நேற்று முன்தினம் மொட்டை அடித்து, நாமம் போட்டு போராட்டம் நடத்தினர். ஆனாலும், விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவும், பேச்சுவார்த்தை நடத்தவும் அதிகாரிகள் முன்வரவில்லை. எனவே, விவசாயிகள் தங்களுடைய போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.அதன்படி, நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்த இடத்தில் தூக்குக் கயிறுகளை தொங்கவிட்டு, அதில் தங்களுடைய தலையை நுழைத்து ஆபத்தான போராட்டத்தை நடத்தினர். அதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விளை நிலங்களை பறிகொடுத்தால், தற்கொலை செய்து சாவதைத் தவிர வேறு வழியில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.மேலும், விவசாயிகளை மிரட்டி நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தரைவழியாக கேபிள் மூலம் புதிய மின்பாதை அமைக்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். ஏற்கனவே, உயர்மின் கோபுரங்கள் அமைத்த நிலங்களின் உரிமையாளர்களுக்கு, ஆண்டு வாடகை நிர்ணயித்து வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Tags : towers ,terrace ,Thiruvannamalai ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...