×

கந்தர்வகோட்டை அருகே நிவாரணம் கோரி 2 கிராம மக்கள் மறியல்

கந்தர்வகோட்டை,  டிச.20:  புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே சுந்தம்பட்டி, மருங்கூரணி கிராமங்களில்  ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள்  சுந்தம்பட்டி-மருங்கூரணி சாலை வழியாக கந்தர்வகோட்டைக்கு சென்று  வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மற்றும் வேலை,  வியாபாரத்துக்கு செல்வோர் இந்த வழியாக செல்கின்றனர். இந்த சாலையில்  புதிய சாலை அமைப்பதற்கு ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு நிரவப்பட்டு பல  மாதங்களாகியும் தார்ச்சாலை அமைக்கவில்லை. இதனால்  இந்த வழியே சைக்கிள்,  டூவீலர்கள் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழுந்து அடிக்கடி  விபத்து ஏற்பட்டு காயமடைகின்றனர். மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.  

மேலும் கஜா புயலால் இப்பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்  வழங்கப்படவில்லை. எனவே நிவாரணத்தை அனைவருக்கும் உடனடியாக வழங்க வேண்டும்,   சாலையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று காலை இரு கிராம மக்களும்  சுந்தம்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த துணை  தாசில்தார் ராமசாமி, கந்தர்வகோட்டை இன்ஸ்பெக்டர் மன்னர்மன்னன்  ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் மறியல் கைவிடப்பட்டது.  போராட்டத்தில் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  இதேபோல் கஜா புயல் நிவாரணம் கேட்டு கந்தர்வகோட்டை அருகே நெப்புகை  ஊராட்சியில் கிராம மக்கள் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம்  துணை தாசில்தார் ராமசாமி மற்றம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நிவாரணம்  வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் அவர்கள் கலைந்து  சென்றனர்.

Tags : Gandharvatte ,
× RELATED திருமயம் அருகே விநோதம்...