×

காரைக்கால் நகரில் மக்களை அச்சுறுத்தும் வெறிநாய்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும் அரசு உதவிபெறும் பள்ளி பெற்றோர் சங்கம் வலியுறுத்தல்

காரைக்கால், டிச.20: காரைக்கால் நகரில் அதிக அளவு சுற்றித்திரியும் வெறிநாய்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என காரைக்கால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பெற்றோர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, காரைக்கால் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பெற்றோர் சங்க தலைவர் வின்சென்ட், செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் குணசேகரன் மற்றும் நிர்வாகிகள் நேற்று மாவட்ட கலெக்டர் கேசவனை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பது: காரைக்கால் நகரத்தில் சுற்றித்திரியும் தெருநாய்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.  இது வெறிநாய்களாகவும், சொறி நாய்களாகவும் மாறி பொதுமக்களையும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளையும் அச்சுறுத்தி வருகிறது. மனிதர்களை மட்டுமின்றி சாலைகளில் திரியும் ஆடு, மாடுகளையும், கோழிகளையும் தாக்கி உயிர் சேதத்தையும், பொருட் சேதத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக ஆசியாவிலேயே தெருநாய்களின் கணக்கு பட்டியல்படி, புதுச்சேரி முதல் இடத்தையும், காரைக்கால் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளதாகவும், காரைக்கால் நகரில் மட்டும் சுமார் 700 நாய்கள் இருப்பதாகவும் ஒரு புள்ளிவிவரம் பொதுமக்களை மேலும் அச்சுறுத்தி வருகிறது. காரைக்கால் காமராஜர் சாலை, வள்ளலார் நகர், அரசு பொது மருத்துவமனை பகுதி, மார்க்கெட் வீதி, திருநள்ளார் வீதி, பாரதியார் வீதி, கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள டாக்டர் அம்பேத்கர் வீதி, நேரு வீதி உள்ளிட்ட பல வீதிகள் தெருநாய்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இந்த தெருநாய்களின் கடியால் தினமும் அரசு மருத்துவமனையில் 10 முதல் 15 நபர்கள் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் அதிகரித்து வரும் தெருநாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : school parenting union ,vigilante gunmen ,Karaikal ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...